உலக சுகாதார அமைப்பு (WHO) ஒமிக்ரொன் திரிபு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா திரிபான ‘ஒமிக்ரொன்’ தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இந்தப் புதிய வகை வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆபிரிக்கா உட்பட சில நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது.
இந்நிலையில், ஒமிக்ரொன் வைரஸின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரொன் வைரஸ் திரிபு மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரஸ் திரிபுகளுடன் ஒப்பிடும் போது இந்த வைரஸ் எந்த அளவு அபாயகரமானது என்பது தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.
அத்துடன், ஒமிக்ரோன் திரிபுக்கான அறிகுறிகள் பிற வைரஸ்களின் அறிகுறிகளுடன் மாறுபட்டவை என்பதை உறுதி செய்ய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.