76ஆவது வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும், தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுசார் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இலங்கையின் 76ஆவது வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படுகின்ற போதிலும், நாட்டின் தேசிய சுகாதார முறையை நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையாதிருப்பது துர்ப்பாக்கியமானது. பெருந்தோட்ட மக்களை தேசிய சுகாதார முறைமை சென்றடையவில்லை.
பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தையும் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்குக் கொள்கை ரீதியான வேலைத்திட்டம் அவசியம்.
சுமார் 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் வெறும் 30 வைத்தியசாலைகளை தேசிய சுகாதாரமுறைமைக்குள் கடந்த காலங்களில் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும், அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொள்கை ரீதியாக இந்தத் தீர்மானத்தை எடுத்துச் செயற்படுத்தும்போது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் கிடைக்கும். இதனூடாக உங்களின் பெயர் வரலாற்றில் பதியும்” – என்றார்.