வவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பெற்றோரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தபோது…
எமது பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இடமாற்றலாகி சென்றிருந்தார்.
தற்போது புதிய அதிபர் ஒருவர் கடந்த 5ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்திற்கு எதிராக பெற்றோர்களாகிய நாம் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், வலயக்கல்வி பணிப்பாளருடனும் இது தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். எனினும் நேற்றையதினம் எமக்கு தெரியாமல் சிலருடன் வருகைதந்த குறித்த அதிபர் கடமையினை பொறுப்பேற்று கொண்டார்.
குறித்த அதிபர் 35 பிள்ளைகளை கொண்ட பாடசாலை ஒன்றையே இதுவரை நிர்வகித்து வந்தார். ஆனால் எமது பாடசாலையில் 480ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்விகற்று வருகின்றனர். எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஆளுமையுள்ள அதிபர் ஒருவரை நியமிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கல்வித்திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து அரசியல் தலையீடுகளை தவிர்த்து தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.
செய்தியாளர் கிஷோரன்