இலங்கைசெய்திகள்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம் – கலவர பூமியாகியது மாவட்டசெயலக வளாகம்!!

vavuniya

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் “நீதிக்கான அணுகல்” எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.

இதில் காணாமல் போனவர்களது உறவுகள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெறவுள்ளதால் அவர்களது உறவினர்களையும் சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (26) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நிகழ்வு இடம்பெறுகின்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள்நுளைய முற்பட்டனர் எனினும் பொலிசார் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆர்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். எமக்கு இழப்பீடும் மரணச்சான்றிதழும் தேவையில்லை. அதனை மாத்திரம் அவர்களிடம் கூறிவிட்டு வருவதாக போராட்டக்காறர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களுடன் முரண்பட்டதால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

பலமணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன்போது காணாமல் போனவர்களின் உறவுகளுக்கும் அது தொடர்பான விசாரணைகளிற்காக வந்திருந்த அதிகாரிகளிற்கிடையில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது இந்த அரசே காணாமல் ஆக்கியது. அவர்களிடம் இருந்து எமக்கான நீதி

எவ்வாறு கிடைக்கும். இதுவரை அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்குக்கும் விசாரணைகளுக்கும் என்ன நடந்தது என்று கேள்வியை எழுப்பியதுடன் மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டோம்.

அலுவலகம் வேணாம் என்கிறோம், நீங்கள் ஏன் அதனை எமக்கு திணிக்கின்றீர்கள்? இனிமேல் இங்கு வரவேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு சென்றனர்.அவர்களுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் முளிபிதுங்கி நின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் கடமையில் நின்றிருந்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண் போராட்டக்காறர்களை கட்டுப்படுத்தி தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். பொலிசாரின் இச்செயற்பாட்டுக்கு அங்கிருந்த பலரும் தமது அதிருப்தியினை தெரிவித்தனர்.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button