இலங்கை

வைத்தியருக்கு சுகயீனம் தத்தளித்த நோயாளிகள் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சம்பவம்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (10) வைத்தியர் வருகை தராததால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைதந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சையைப் பெற முடியாது அந்தரித்தனர்.

இதுதொடர்பாக அந்த வைத்தியசாலையின் வைத்தியருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவேளை, வைத்தியரின் மகளினால் அந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.

வைத்தியரின் மகள் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில்,

“அம்மாவிற்கு உடல் சுகயீனம், அதனால் இன்று வைத்தியசாலைக்கு சமூகமளிக்க மாட்டார். இது தொடர்பான சுகயீன விடுமுறை கடிதம் இன்று காலை உரியவர்களுக்கு வழங்கப்பட்டது” என்றார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்களுக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்போது பணிப்பாளர் தெரிவிக்கையில்,

குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் சுகயீன விடுமுறையை முறைப்படி பெற்றுள்ளார். மேலும் தற்போது அந்த வைத்தியசாலைக்கு ஒரு வைத்தியர் மட்டுமே சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். எனவே இன்று குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு வரமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேறு ஒரு வைத்தியரை இன்றையதினம் பதில் கடமைக்கு அமர்த்தியுள்ளோம். அவர் வேறு ஒரு வைத்தியசாலையில் கடமை புரிகின்றார். எனவே அந்த வைத்தியசாலையின் கடமைகளை முடித்துவிட்டு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு வருவார். இந்த வைத்தியர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம் என்றார்.

அந்தவேளை அரைவாசிக்கும் அதிகமான நோயாளிகள் வைத்தியர் வரவில்லை என வீட்டிற்கு சென்றுவிட்டனர். பின்னர் 11.30 மணியளவில் வேறொரு வைத்தியர் அங்கு கடமைக்கு வந்திருந்தார்.

இது தொடர்பாக அங்கிருந்த நோயாளிகள் தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலை ஒரு பிரதேச வைத்தியசாலை தரத்திற்குள் உள்ளடங்கப்படும் வைத்தியசாலை. ஆனால் ஒரு வைத்தியர் மட்டுமே இங்கு கடமை புரிகின்றார். அத்துடன் 24 மணிநேர சேவைகளும் இங்கு வழங்கப்படுவதில்லை.

எனவே இந்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களை கடமைக்கு அமர்த்தி 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்தினால் மக்கள் தமக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையோ அல்லது சிகிச்சைகளையோ இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button