வவுனியா பல்கலைகழகத்தின் வியாபாரக்கற்கைகள் பீடத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஆய்வு மாநாட்டில் ஆய்வுகளை சமர்பிக்குமாறு வவுனியா பல்கலைகழகம் கோரியுள்ளது.
இது தொடர்பாக வவுனியா பல்கலைகழகத்தின் வியாபார கற்கைள் பீடத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியாப்பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடமானது 4வது வியாபாரக் கற்கைகள் ஆய்வு மாநாட்டினை நடாத்தவுள்ளது. குறித்த மாநாடு இம்முறை ‘பெரும்பரவல் தொற்று நோய்க்கான வியாபாரத் தயார் நிலை முன்னுதாரண மாற்றத்திற்கான நேரம்’ என்ற ஆய்வுக் கருப் பொருளில் 2022ஆம் ஆண்டு ஆடி மாதம் 4ம், 5ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்திருக்கின்றது.
இந்த ஆய்வு மாநாடானது வியாபாரக்கற்கைகள் பீடத்தின் வெள்ளி விழாவையொட்டி நடாத்தப்பட இருக்கின்றது.நாம் எல்லோரும் பல்வேறுபட்ட எதிர்பாராத சவால்கள் மற்றும் இடர்கள் நிறைந்த சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக கொவிட்-19 பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திலும் வியாபார செயற்பாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிதாகவுள்ளது. இந்த இடரானது பல மில்லியன் வேலைவாய்ப்புக்களை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது.
அத்துடன் நாடுகளின் பொருளாதாரமந்தம், வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்களின் முடக்க நிலை போன்றவற்றினைத் தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு வித்திட்டு வருகின்றது. இந்த வகையில் எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடியினைத் தவிர்த்து வாய்ப்புக்களினையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களினையும் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் புதிய வியாபார எண்ணங்களைத் தூண்டி அவர்களை வியாபாரச் சூழலில் காலத்திற்கேற்ப மாற்றங்களினைச் செய்வதற்கு, முனைவிப்பது தற்காலத்தில் மிகமுக்கியமான அம்சமாக உள்ளது.
தற்கால கொவிட்-19 பெருந்தொற்று பரவும் காலத்தில் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார நலன் சார்ந்து இயங்கிவரும் வியாபார தொழில் துறைகளைக் காலத்தின் தேவைக்கேற்ப கட்டியெழுப்பும் வழி வகைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் தற்கால நெருக்கடியான சூழலில் வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதனூடாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமை ஒழிப்புத் திட்டங்களை வலுப்படுத்தல், ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்குதல், மகிழ்ச்சியான நல்வாழ்வுச் சூழலை உருவாக்குதல் போன்றவற்றினை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் வினைத்திறனான, ஆக்கபூர்வமான மற்றும் காலத்திற்கேற்ற வியாபார சூழலைக் கட்டியெழுப்பக் கூடிய நடைமுறைக்கு சாத்தியமான விடயப் பரப்புக்களை உள்ளடக்கி வியாபாரத் துறையில் நடாத்தப்படுகின்ற ஆய்வுகளானவை மிகவும் பயனுறுதி வாய்ந்ததாக காணப்படுகின்றன. குறிப்பாக நிதியியல் மற்றும் கணக்கீடு, நெருக்கடி முகாமைத்துவம், விவசாய வணிகம், வியாபாரப் பொருளியல், முயற்சியாண்மை, மனிதவள முகாமைத்துவம், அறிவு முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், செயற்றிட்ட முகாமைத்துவம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், சர்வதேச வியாபாரம், தகவல் முறைமை கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பாடல் மற்றும் வியாபார தொடர்பாடல் போன்ற தலைப்புக்கள் சார் சவால்களைத் தீர்க்கக்கூடிய பொறிமுறைகளைத் தற்காலத்தின் தேவைக்கேற்ப நிறுவுவதுடன் வியாபாரங்களைத் தற்கால வியாபாரச் சூழல் சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவதுடன் இந்த ஆய்வு மாநாடு முனைப்பாக நடாத்தப்படவுள்ளது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வவுனியாப் பல்கலைக்கழக வியாபார முகாமைத்துவ இதழில் பிரசுரிக்கக்கூடிய சந்தர்ப்பமானது பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது. ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரையினை மார்ச் மாதம் 31 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு வரை சமர்ப்பிக்க முடியும்.
ஆய்வுமாநாட்டில் முதல் முறையாக உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர் மல்கொம் கூப்பர், கலாநிதி நைகெல் வில்லியம்ஸ் மற்றும் பேராசிரியர் ரவிசங்கர் ஆகியோர் முதன்மைப் பேருரைகளை வழங்கவிருக்கின்றனர். மேலும் இந்த ஆய்வு மாநாட்டிற்கு பணியாளர் மேலாண்மை பட்டயநிறுவனம், சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்காளர்கள், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் மற்றும் திட்ட மேலாண்மை நிறுவனம் ஆகியோர் பங்காளர்களாக விளங்குகின்றனர்.
இந்த மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களினை
https://fbs.vau.ac.lk/rcbs2022/ என்ற இணையத்தளத்தில் அல்லது இந்த ஆய்வு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர். யூட் லியோனிடம் ( 0773400855) பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த மாநாடு தொடர்பாக வவுனியா பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தலைவர் வை.நந்தகோபன் ஆகியோர் இது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.
செய்தியாளர் கிஷோரன்