மனிதாபிமான வலயங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு ரஷ்யா உரிய முறையில் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென யுக்ரேன் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், உறுதியளிக்கப்பட்ட வகையில் ரஷ்யா தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் யுக்ரேன் துணைப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சுமார் 80 பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மரியுபோல் நகர பள்ளிவாசலொன்றின் மீது ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி பிரஜைகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் குறித்த பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதலின் மூலம் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா இடையூறு விளைவிப்பதாக யுக்ரேன் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் மின்சாரம் மற்றும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் உறைபனியில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மக்களுக்கு வழங்கப்படுகின்ற மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தடுத்து வருவதாகவும் யுக்ரேன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்காவே அதிக அளவிலான தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யுக்ரேனின் தலைநகர் நோக்கி ரஷ்ய படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மைய நகரங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் போது உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு இரு நாட்டு தலைவர்களும் ரஷ்யாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.