சுகாதார சேவையாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 18 தொழிற்சங்கத்தினர் நேற்று (06) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நடவடிக்கைக்கு அமைய இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்க சுகாதார ஊழியர்கள் தீர்மானித்தனர்.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பல மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயுள்ளனர்.
கோரிக்கைக்கு பதிலளிக்காவிட்டால், அடுத்த 7 நாட்களுக்குள் அத்தியாவசிய மருத்துவ சேவைகளில் இருந்து விலகுவதாக தாதியர் மற்றும் துணை மருத்துவ தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இருப்பினும், புற்றுநோய், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட 10 முக்கிய மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.