நாம் கடந்துவந்த காலம் வசந்தகாலம் போன்றது. அதாவது எமது
சிறுவயதுப் பராயம் வண்ணங்களால் ஆனதென்பது உண்மைதானே .
அந்தப் பராயத்தில் எத்தனை சொற்களை கேட்டிருக்கின்றோம், எத்தனை
வார்த்தைகள் நெஞ்சுக்கூட்டுக்குள் குமிழியிட்டிருக்கிறது. பொங்கிப் பொங்கி
பிரவாகித்திருக்கிறது. நாம் அறிந்த, அறியாத பல வார்த்தைகள் எம்மைக்
கட்டியிழுத்திருக்கிறது. தெரிந்துகொண்ட வார்த்தைகளை எங்கே
சேமித்திருக்கிறோம், மனக்கிடங்கில் தானே!
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பொதிந்து கிடக்கும் வார்த்தைகள் ஏராளம்
ஏராளம். அந்த வார்த்தைகளை படைப்பாக பிரசவிப்போர்
எழுத்தாளராகின்றனர். அந்த கலை அனைவருக்கும் கைவரப்பெற்றதல்ல.
காசுக்கணக்கு பார்ப்பது போலவோ, கணினிக்கணக்கு செய்வது போலவோ
சாதாரணமானதல்ல படைப்புகளை பிரசவிப்பது. அது ஒரு தியானம்.
ஒரு படைப்பாளன், எழுத ஆரம்பித்துவிட்டால் வேறொரு உலகிற்குள்
அமிழ்ந்துவிடுவது இயல்பு. எழுத ஆரம்பிக்கும் கணம் வரைதான் அலுப்பும்
சோம்பலும். நாற்காலியில் அமர்வதும் பேனாதாளையோ அல்லது
கணினித்திரையையோ தொடுவது வரைதான் தயக்கம். எழுத
ஆரம்பித்துவிட்டால் படைப்பு தனக்குள் எம்மை ஈர்த்துவிடும். அந்த
படைப்பை வருடுகிறோம், அதனை, பற்றிக்கொள்கிறோம், அதனோடு
உறவாடுகிறோம். அதுவும் எங்களை ஸ்பரிசிக்கிறது, கொண்டாடுகிறது,
விட்டுவிடாமல் தாங்கிக்கொள்கிறது. படைப்பிற்கும் படைப்பாளனுக்கும்
ஒரு பந்தம் உண்டாகிறது. எங்கோ எப்போதோ சந்தித்த மனிதர்களை
அந்தப் படைப்பிற்குள் மீண்டும் சந்திக்கின்றோம், அவா்களோடு
உரையாடுகிறோம், அவா்களின் வழியாக நாங்கள் பேசிக்கொள்கின்றோம்.
மலருக்குள் இருக்கும் மாய இரகசியம் போல, கடலுக்குள் ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஆழத்தைப்போல, மரங்கள் பேசுகின்ற மர்ம அசைவைப்போல,
படைப்புகளும் நமக்குப் புரியாத, நாம் தெரிந்துகொள்ளாத ஒரு புதிய
உலகிற்குள் எம்மை இழுத்துச் செல்கிறது. எங்களுக்குள் உறைந்துகிடக்கும்
உணர்வுகளை வார்த்தைகள் வழியாக கொட்டமுனைகிறோம்.
மனம் என்ற பெட்டகம் தனக்குள்ளே கிடந்த வார்த்தைக் குவியலை அள்ளி
அள்ளி தருகிறது, படைப்பாளன் அதற்கு உணா்வு கொடுத்து வடிவம்
கொடுத்து அனுப்பிக்கொண்டிருக்கின்றான். அது படைப்பாக வடிவம்
கொள்கிறது. நாம் எதை நேசிக்கின்றோமோ அதுவாகவே மாறுவது இயல்பு
தானே. எழுத்துக்களை நேசிப்பவன், அந்த எழுத்துக்குள் தொலைந்து
போகிறான். அதற்குள் தான் அமைதியையும் ஆனந்தத்தையும் தேடுகிறான்.
எழுத்தோடு உறவாடுகின்ற அந்தக்கணங்களில் நிஜ உலகில் இருந்து
படைப்பாளன் தனித்துவிடுகிறான். படைப்பிற்கும் படைப்பாளனுக்குமான
பந்தத்திற்குள் வேறு யாரும் நுழைய முடியாதபடி இருவரும் இறுக
கட்டப்படுகின்றனர்.
எழுத்து உணவு தராது என்பது உண்மைதான், ஆனால் எழுத்து
வாழக்கற்றுத்தருகிறது, வாழ்வியலைச் சொல்லித்தருகிறது, எழுத்தை
நேசிக்காதவன், கண்ணிருந்தும் குருடனாகிறான், எழுத்தின் வாசனை
எம்மை வாசனையாக்குகிறது என்பதை உணராதவரை வாழ்க்கை
அர்த்தமற்றதே.
நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது‘ என்கிறார் பிளாட்டோ.
உண்மைதான், எமது மனதிற்குள் புதைந்துகிடப்பதேயன்றி வேறொன்றும் வெளியே
இல்லை. கண்டுபிடித்து கோர்ப்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்களின் பெயா்
காலகாலமாய் நிலைத்திருக்கிறது. காலஓட்டத்திற்குள்ளும் கடிகார
அசைவிற்குள்ளும் தொலைந்து போகின்றவா்களை காலமும் மறந்துவிடுகிறது.
கோபிகை.