மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான்.
உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தைத் தோண்டி, சிறுவனை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.
சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு வழங்கப்பட்டது.
கைப்பேசி மற்றும் கெமரா மூலம் சிறுவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த சிறுவனை மீட்கும் நடவடிக்கையானது உலக நாடுகள் முழுவதினதும் கவனத்தை ஈர்த்தது.
எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.
மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் உயிருடன் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயதுச் சிறுவன் ரயான் உயிரிழந்து விட்டதாக இரண்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அத்துடன் மொரோக்கோ நாட்டின் மன்னர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு ரயானின் பெற்றோரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ரயானுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.