தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனத் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட அணிகளில் பங்களித்த வேலுப்பிள்ளை தவராஜா மாஸ்டரின் பிரிவு உணர்வாளர்களைச் சற்றுப் பலமிழக்க வைத்துத்தான் விட்டது. இராஜதுரை – காசி ஆனந்தன் காலத்தில் தமிழரசுக் கட்சிப் பிரமுகராக ஆரையம்பதியில் விளங்கிய கோணாமலையுடன் இவர் தொடர்புபட்டிருந்தார்.தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும் அதன் தேவையும் குறித்த பணிகளில் ஈடுபட்டார். துவிச்சக்கர வண்டியில் பயணித்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட சிவஜெயம் (காசி ஆனந்தனின் சகோதரர்) பாசி (பாலிப்போடி சின்னத்துரை) போன்றோருடன் இணைந்து தன்னாலான பங்களிப்பை வழங்கினார்.
1983 இன அழிப்புக்கு பின்னரான காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அணிகள் தோன்றின. அதற்கு முன்னரே தோன்றிய அமைப்பான புலிகளின் வழிமுறையே இந்த ஆசிரியருக்கு சரியானதாகத் தெரிந்தது.எனவே அதன் ஆதரவாளராக விளங்கினார்.எனினும் நடைமுறை விடயங்களில் தவறு எனத் தோன்றும் விடயங்களை அவர் சுட்டிக்காட்டத் தயங்குவதில்லை. அவரது இந்த அணுகு முறை புலிகளுக்கும் பிடித்திருந்தது.அதனால் அவர்களின் பெருமதிப்புக்குரியவராக விளங்கினார். 1985 காலங்களில் காத்தான்குடியைச் சேர்ந்த ஜவாத் மாஸ்டர் போன்றோரும் ஆரையம்பதியைச் சேர்ந்த கனகரெத்தினம் மாஸ்டர் முதலானோரும் இவரும் இணைந்து சமாதானக் குழுவை அமைத்தார்கள்.காத்தான்குடி – ஆரையம்பதி பகுதிகளில் தமிழ் – முஸ்லீம் மக்களிடையே தோன்றிய சந்தேகம்,தவறான புரிதலினால் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதில் இக்குழு காத்திரமான பங்கை வகித்தது.
இந்திய இராணுவத்தின் வருகை, அதனுடனான மோதலையடுத்து இந்த மண்ணில் நிகழ்ந்துகொண்டிருப்பது மக்கள் போராட்டம் தான் என்பதை உலகுக்கு எடுத்தியம்பும் வண்ணம் அன்னை பூபதி உண்ணாநோன்பிணை மேற்கொண்டார்.
அந்த நெருக்கடியான காலத்தில் தன்னால் சாத்தியமானளவு பங்களிப்பை வழங்கினார். தொடர்ந்து இந்தியப்படையினருக்கு ஆதரவாக விளங்கிய குழுக்களினால் கனகரெத்தினம் ஆசிரியர் .கணபதிப்பிள்ளை அதிபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாதுகாப்புக்கு கருதி இவர் வெளியேறவேண்டி ஏற்பட்டது. தமிழ் இனப் பற்றாளர்களின் பாதுகாப்பில் இவர் பத்திரமாக இருந்தார்.
பின்னர் மட்டக்களப்புக்குத் திரும்பி வந்த போதும் இருதயபுரத்திலேயே வாழ்ந்து வந்தார். சமாதான காலத்தில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த மானுடத்தின் ஒன்று கூடல்
என்ற தலைப்பிலான மாநாட்டில் இவர் கலந்து கொண்டார்.கிழக்கில் பிரபல எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் எஸ்.எல்.எம் ஹனிபா,ஊடகவியலாளர் சலீம் போன்றோரும் இவருடன் இம் மா நாட்டில் பங்கு கொண்டனர். இக் காலத்தில் இவர் கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார்.தன்னுடன் பழகிய பலரை அங்கு இவரால் காணமுடிந்தது.
இதன் பின்னர் தமிழ்த் தேசியத்தால் ஜீரணிக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்தேறின. அக்காலத்தில் துணிந்து ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களுடன் நின்றோரில் இவரும் ஒருவர். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்தோரில் ஒருவராக இருந்தார்.கடந்த மாநகர சபைத் தேர்தலில் கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாகத் தெரிவானார். தொடர்ந்து மேயராகத் தெரிவான சரவணபவனுக்கு பக்கபலமாக இருந்தார்.
இயற்கையின் நியதியின் படி காலனின் அழைப்பு தவிர்க்கமுடியாதது. 11.12.2021 அன்று இவ்வுலகைப் பிரிந்தார்.மனைவி ,மக்களுக்கு மட்டுமல்ல இவரை நேசித்த மட்டு மாநகர மக்களுக்கும் இன உணர்வாளர்களும் வாழ் நாள் முழுவதும் இவரது பணிகள் பற்றி நினைவுகள் பசுமையாக இருக்கும் .