போதியளவு எரிபொருள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாட்டின் 07 மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 264 தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அங்கத்துவம் பெறாத 250க்கு மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நிதி செலுத்தப்பட்ட போதிலும் இதுவரை தேயிலைத் தொழிற்சாலை பல எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேயிலை தொழிற்துறை குறித்து கரிசனையற்று செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் இன்மையினால் தேயிலைக் கொழுந்துகளைக் கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள 04 இலட்சம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் 20 இலட்சத்தை அண்மித்த பெருந்தோட்டத்துறை சார் தொழிலாளர்கள் இதன் மூலம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார்.