இந்தியாசெய்திகள்

கைதான தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!!

Tamil Nadu fishermen released

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18, 20 ஆகிய திகதிகளில் ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குசென்ற தமிழக மீனவர்கள் 55 பேர் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு குறித்த மீனவர்கள் அனுப்பப்பட்டனர். இது குறித்த வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அவர்கள் தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தமிழக மீனவர்கள் 55 பேரும், தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத் தண்டனை விதித்து நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால், அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேநேரம், அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை, எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 இடங்களில் ஏலமிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு மௌனம் காப்பது கண்டனத்திற்குரியது என அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், படகுகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வுகாண முன்வந்துள்ள தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையிலும் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்போவதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இன்று வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களின் படகுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அத்துடன், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்  பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில் இரு நாட்டின் மீனவ சமூகத்தினருக்கும் இடையில் நட்புறவு வலுப்படும்.

மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே சுமூகமான தீர்வினை எட்ட முடியும் என்றும் செந்தில் தொண்டமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button