” தெய்வமே இது எங்கள் வீ(நா)டு. ஐந்தாண்டுகளுக்குதான் உங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தோம். ஆனால் ஈராண்டுக்குள்ளேயே வீ(நா)ட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிவிட்டீர்கள். மலசலகூடத்தைக்கூட உங்கள் குடும்பம் விட்டுவைக்கவில்லையே!
ஐந்தாண்டு கால ஒப்பந்தம் உள்ளது உண்மையே. அது முடியும்வரை காத்திருந்தால் எங்களின் வீ(நா)ட்டுக்கு எப்படியும் சமாதிகட்டிவிடுவீர்கள். வீட்டில் உள்ள ஓட்டைகளே இதற்கு சான்று.
அதனால்தான் குடும்பத்தோடு வெளியேற சொல்கின்றோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்! கௌரவமாக வெளியேறுங்கள்!!
நீங்கள் வீ(நா)ட்டை சுத்தமாக வைத்திருந்தால் – முறையாக நிர்வகித்திருந்தால் ஒப்பந்தகாலம் முடிவதற்குள் உங்களை விரட்டுவது தவறு. அந்த கர்மவினை எம்மை சும்மா விடாது என்பதும் தெரியும். ஆனால் நீங்கள் வீ(நா)ட்டையே விழுங்க பார்ககின்றீர்கள். எனவே, வீ(நா)ட்டைக் காக்கவே உங்களை விடைபெற சொல்கின்றோம்.
அடித்தது போதும்! அழித்ததும் போதும்!! தயவுசெய்து போய்விடுங்கள்!!
அதைவிடுத்து நாங்கள்தான் வீட்டுக்கு ‘பெயின்ட்’ அடித்தோம் – அதிகாலையில் வீட்டுக்கு முன்னால் கோலம் போட்டோம், வீட்டிலுள்ள எறும்புகளுக்கும் சோறு போட்டோம் என அழுது புலம்பி அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை.
நாங்கள் இல்லாவிட்டால் இந்தே வீ(நா) டே இருந்திருக்காது – வீ(நா)ட்டை காத்தோம் என நீங்கள் வழங்கும் விஞ்ஞான விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீ(நா)ட்டால்தான் உங்கள் குடும்பம் வாழ்ந்தது – வளர்ந்தது என்பதை மறந்துவிட்டீர்களே தெய்வமே! வீ(நா)ட்டை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.
” எங்கள் குடும்பத்தை எப்படியும் திட்டுங்கள், தாங்கிக்கொள்கின்றோம். – ஆனால் வீட்டை வாடகைக்கு எடுத்துகொடுத்த பிரோக்கரை மட்டும் அவமதானப்படுத்தி விடவேண்டாம். இதயம் தாங்காது” – என அறிவுரைகூறும் நீங்கள், குடும்பத்தார் வீ(நா)ட்டை அழிக்கும்போது – இதே பாணியில் அறிவுரை வழங்கியிருந்தால் – கண்டித்திருந்தால் தற்போது வெளியேற சொல்லி இருக்கமாட்டோம். வீ(நா)டும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.
நிலைமையை புரிந்துகொள்ளுங்கள் தெய்வமே!!