இலங்கைசெய்திகள்

மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. லக்ஸபான, கனியோன், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீரத்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மௌசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகள், ஓடைகள், ஆறுகள் ஆகியன பெருக்கெடுத்து தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பிளக்பூல் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மண்சரிவினால் நுவரெலியா தலவாக்கலை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்போது வீதியில் கொட்டிக்கிடக்கும் மண்ணை அகற்றி போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வர வீதிப் போக்குவரத்து அதிகார சபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயமும் வெள்ள அனர்த்தமும் ஏற்பட்டுள்ளதனால் பல குடும்பங்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மழையுடன் கடும் பனிமூட்டமும் அடிக்கடி நிலவி வருவதனால் வளைவுகள் நிறைந்த இவ்வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனிமூட்டம் நிலவும் வேலையில் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கினை ஒளிரச்செய்தவாறு வாகனத்தினை தமக்குரிய ஒழுங்கையில் மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-சுந்தரலிங்கம்-

Related Articles

Leave a Reply

Back to top button