ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால் அவை அமைச்சரவைக் கூட்டத்திலோ அரச கட்சிக் கூட்டத்திலோ அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்திலோ மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைகள் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தற்போதைய நிர்வாகம் முன்னோக்கிச் செல்ல முடியுமா என ஊடகவியலாளர்கள் வினவியபோது தனிநபர்கள் ஆட்சி செய்வதற்காகப் பொதுமக்கள் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவரின் கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புடன் செயற்படுமாயின் பிரஜைகள் அறிவார்கள் என்று தெரிவித்த அவர் அரச அரசியல்வாதிகள் என்ற வகையில் கருத்துக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இந்தத் தீர்மானம் தமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர் – சுடர்