இன்றைய தினம் மே தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் காரணமாக விசேட போக்குவரத்து திட்டங்கள், வீதி பாதுகாப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வெளி மாகாணங்களில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
நுகேகொடை, பேலியகொட, பேஸ்லைன் வீதி, வோட் பிரதேசம், லிப்டன் சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, தொழிநுட்ப கல்லூரி சந்தி, கொம்பனி தெரு, ஹைட்பார்க், லேக் ஹவுஸ், கொள்ளுப்பிட்டி, பித்தளை சந்தி உள்ளிட்ட வீதிகளில் மே தின ஊர்வலங்கள் இடம்பெறவுள்ளன.
இதன்காரணமாக மதியம் 12 மணிக்கு பின்னர் கொழும்பு நகரின் சில வீதிகளில் உந்துருளிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கூட்டங்களுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறித்த இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு கூட்டங்களுக்கு வருபவர்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.