இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்!!

நெலும்தெனிய – துந்​தொட்டை – கலாபிடமட (பி 540) வீதியில் தெதிகம புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22-12-2021 அன்று தெதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அரசாங்க பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் நடைபெற்றது. .
இந்நிகழ்வில் தெதிகம தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளர் உதயகாந்த குணதிலக, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட பிரதேச அரசியல் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உத்தேச தெதிகம புதிய பாலம் 50 மீற்றர் நீளமும் 11.5 மீற்றர் அகலமும் கொண்டது. இந்த இருவழிப் பாதைப் பாலத்தின் செலவு 145 மில்லியன் ரூபாவாகும். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஜெயவன்ச கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் பாலத்தின் நிர்மாணப் பணிகளை 456 நாட்களுக்குள் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்கள் வேகமாக அதிகரித்து வருவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர்…

இலங்கையில் வீதிவிபத்துக்களினால் நாளொன்றுக்கு சுமார் எட்டு பேர் உயிரிழக்கின்றனர். இது மிகவும் சோகமான நிலைமையாகும். விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கு திட்டமொன்றை உருவாக்குவதற்கு உலக வங்கி எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் விபத்துக்களை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஜனவரி இரண்டாவது வாரத்தில் அந்த திட்டத்தை தொடங்குவோம். பலர் நித்திரை காரணமாக விபத்துக்குள்ளாவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் ஓய்வெடுக்கும் பகுதிகளை அமைத்து வருகிறோம். வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தூங்கிவிட்டு செல்ல முடியும்.காப்புறுதி நிறுவனங்களை இணைத்து பாரிய திட்டமொன்றை முன்னெடுக்க இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறோம்.​ அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button