இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

தமிழீழத்தை உருவாக்க விரும்பினால் அதற்கும் நாங்கள் தயார்- எம்.கே.சிவாஜிலிங்கம் சூழுரை.

தனி நாடு, சுதந்திர தமிழீழத்தை உருவாக்க விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் அவரது அலுவகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் அதிவிசேட வர்த்மானி மூலம் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை அமுல்படுத்துவதற்காக 13 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக வணக்கத்திற்குரிய ஞானசாரதேரரை நியமித்துள்ளார். இவர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்ததன் காரணமாக தண்டிக்கப்பட்டு பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வெளியில் வந்தவர். எத்தனையோ சர்சைகளில் ஈடுபட்டவர். அப்படிப்பட்ட ஒருவரை தலைவராக நியமித்து ஒரு நாடு ஒரு சட்டம் என வலியுறுத்த முடியாது. இக்குழுவில் பெயரளவில் கூட ஒரு தமிழர் இல்லை. ஒரு சில முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி என்றால் இந்நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லையா? தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லையா? என்கின்ற கேள்வியை இலங்கை ஜனாதிபதியைப் பார்த்துக் கேட்கின்றோம்.ஒரு இனத்தவர்கள் இருக்கும் நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் பொருத்தம். ஆனால் இலங்கையில் பல்வேறு இனத்தவந்கள், பல்வேறு மதத்தவர்கள் என பல்லின மக்கள் வாழும் இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை அமுல்படுத்தப் போகிறீர்களானால் அது பெளத்தை மட்டுமே சார்ந்ததாக அமையும்.

இதனால் தமிழர்களை இந்த நாட்டை விட்டு கழுத்தில் பிடித்து தள்ளுவதையே உணர்கிறோம். இதனால் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதனை நாம் அறிவிப்பதற்கு தடையில்லை என்பதுடன் அந்நிலைமைக்கு எம்மைத் தள்ளிவிடுகின்றீர்கள். இதன் மூலம் எங்களை ஒரு தனிநாட்டை, சுதந்திர தமிழீழத்தை உருவாக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றோம். நீங்கள் இதைதான் செய்வதற்கு எம்மைத் தூண்டுவீர்கள் என்றால் அதனையும் செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

எனவே ஏமாற்று வேலையாக அமையும் இந்த ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை ஜனாதிபதி அவர்கள் மீளப்பெற வேண்டும். இந்த குழுவைக் கலைக்க வேண்டும், இந்த எண்ணப்பாடுகளை கைவிட வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாவதற்கு முன்னரே, இவ்வளவு அவசர அவசரமான கோரிக்கைகள் ஏன் எழுகிறது. ஆகவே சர்தேசத்தை பார்த்து சொல்ல விரும்புவது, தமிழினத்தை மதிக்கப்படமால் அவமதிக்கும் செய்யற்பாட்டிற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என சர்வதேசம் தான் கூறவேண்டும்.

எனவே நாங்கள் பிரிந்து செல்வதை கட்டாயப்படுத்தினால் அதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதனையும் ஜனாதிபதிக்கும் ஆட்சியாளர்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button