கதைமுத்தமிழ் அரங்கம்.

மரணம்-மொழிபெயர்ப்புக்கதை!!

short story

ஜேம்ஸ் ஜாய்ஸ்-ஸிந்து ஜா

தெருவிளக்கின் வெளிச்சம்,  ஜன்னலிலிருந்து வாசல் கதவின் மேல் ஒரு அம்புச் சிதறல் போலப் பரவியிருந்தது. காப்ரியல், தான் அணிந்திருந்த கோட்டையும் தொப்பியையும் படுக்கையின் மீது எறிந்து விட்டு ஜன்னலை நோக்கி இருந்த அறையைக் கடந்து சென்றான். மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஓரளவாவது அடங்கட்டும் என்பது போல வெளியே தெரிந்த சாலையை உற்றுப் பார்த்தான். பிறகு வெளிச்சத்துக்கு முதுகைக் காட்டியபடி மேஜையை நோக்கினான். அவள் தனது தொப்பியையும் மேலாடையையும் கழற்றி விட்டு கண்ணாடி முன் நின்றிருந்தாள். காப்ரியல் சில நொடிகள் கழித்து “கிரேட்டா !” என்று அவளை அழைத்தான்.

அவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்து விட்டு அவனை நோக்கி வந்தாள்.  அவள் முகத்தில் படர்ந்திருந்த கடுமையும் இறுக்கமும் காப்ரியலைப் பேச

வொட்டாமல் அடித்தன. இது தான் விரும்புவதைப் பேசுவதற்குச் சரியான தருணமல்ல என்று அவன் நினைத்தான்.

“ஏன் நீ இவ்வளவு களைப்பாக இருக்கிறாய் ?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“ஜுரமா ? அல்லது பலகீனமாக இருக்கிறதா?”

“இல்லை. கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. அவ்வளவுதான்” என்றாள் அவள்.

அவள் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தாள். காப்ரியல் சற்றுப் பொறுத்தான். தைரியமின்மை தன்னைச் சுற்றி வளைப்பது போல உணர்ந்தான்.

“கிரேட்டா !”

“என்ன விஷயம் ?”

“உனக்கு மாலின்ஸைத் தெரியுமல்லவா ?”

“ஆமாம். அவனுக்கென்ன இப்போது?”

“அவனிடம் நான் கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டான். பாவம். ரொம்ப நல்லவன்” என்றான் போலியான பரிவுக் குரலில்.

அவள் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் நின்றது அவனுக்கு எரிச்சலூட்டியது. மேலும் எப்படித் தொடர்வது என்று சற்றுக் குழம்பினான். அவளுக்கு என்ன ஆகிவிட்டது? அவனிடம் அவள் தானாகவே முன்வந்து இயைந்து பேசினால்? அவள் கண்களில் அத்தகைய தாபம் காணப்படவில்லை. அவளுடைய வினோதமான உணர்வுகளை ஆளுபவனாகத் தான் ஏன் இல்லை?

சற்றுக் கழித்து “எப்போது அவனுக்குக் கடன் கொடுத்தாய்?” என்று அவள் கேட்டாள்.

காப்ரியலுக்கு அந்தக் குடிகார நாய் மாலின்ஸ் மீது பயங்கரமான கோபம் ஏற்பட்டது. மிக மட்டமான கெட்ட வார்த்தைகளால் அவனைத் திட்ட வேண்டும் போலிருந்தது. காப்ரியலுக்கு அவனது ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து அவளிடம் கதறி அழுது அவள் உடம்பை ஆட்கொள்ள வேண்டும் போலிருந்தது.

ஆனால் அவன் அவளிடம் “ஹென்றி ஸ்ட்ரீட்டில் கிறிஸ்துமஸ் கார்டு கடையைத் திறந்தானே, அப்போது கொடுத்தது” என்றான் ஹீனமாக.

கோபமும் வெறியும் பின்னிப் பிணைந்து அவனைத் துன்புறுத்திக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் அவள் ஜன்னலை விட்டு நகர்ந்து வந்ததை அவன் கவனிக்கவில்லை.  அவள் அவன் முன்னே வந்து நின்று அவனை உற்றுப் பார்த்தாள். பிறகு, திடீரென்று தன் குதிகால்களை உயர்த்தி கைகளை அவன் தோள் மீது இருத்தி அவனை முத்தமிட்டாள்.

“உனக்கு ரொம்ப தாராளமான மனசு !” என்றாள் அவள்.

காப்ரியல் அவளது முத்தத்தாலும் சொற்களாலும் ஈர்க்கப்பட்டவனாய் அவளது தலைமுடி மீது தன் கைகளை வைத்து மென்மையாகத் தடவினான். அவன் மனது மகிழ்ச்சியில் திளைத்தது. அதுவும் அவள் தன்னை நாடி வந்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது !  அவளும் அவனை மாதிரியே நினைத்துக் கொண்டிருந்தாள் போலி

ருக்கிறது.அவனுடைய தாப உணர்ச்சிகளை உணர்ந்தவளாய் அவள் தன்னை அவனிடம் ஒப்படைக்கத் தீர்மானித்திருக்க வேண்டும். இப்போது அவளது அருகாமையில் தான் தைரியமற்றவனைப் போல உணர வேண்டியதில்லை.

அவளது  கையைத் தன் கையால் பற்றிக் கொண்டு அவன் நின்றான். பின் அவளை அணைத்துக் கொண்டான்.

“கிரேட்டா ! இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

அவள் பதிலெதுவும் அளிக்கவில்லை. அவளது உடலையும் முழுமையாக அவனிடம் ஒப்படைக்கவில்லை.

மறுபடியும் அவன் “என்னவென்று சொல்லேன் மை டியர். எனக்குத் தெரிந்த விஷயம்தானா அல்லது எனக்குத் தெரியாததா?” என்று கேட்டான்.

அவள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. பிறகு கண்ணீருடன் “எனக்கு அந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது :’ஆக்ரிமைச் சேர்ந்த சிறுமி’ என்ற பாட்டு…” என்றாள்

அவள் அவனிடமிருந்து விடுபட்டு படுக்கையை நோக்கி ஓடிச் சென்று அதில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டாள். காப்ரியல் அதிர்ச்சியுடனும் திகைப்புடனும் அவள் அருகில் சென்றான். போகும்வழியில் எதிர்ப்பட்ட கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். அவனுடைய அகன்ற மார்பை எடுத்துக் காட்டும் சட்டையும், எப்போதும் முகத்தில் தங்கியிருக்கும் ஆச்சரிய பாவனையும் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியும் அதில் ரிந்தன.

“இப்போது அந்தப் பாட்டுக்கு என்ன வந்து விட்டது ? நீ எதற்காக இப்படி அழ வேண்டும்?” என்று கேட்டான்.

அவள் தலையைத் தூக்கி அவனைப் பார்த்து விட்டு ,ஒரு குழந்தையைப் போல் கர்சீப்பை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவன் இப்போது கனிவுடன் அவளைப் பார்த்து “எதற்காக கிரேட்டா?” என்று கேட்டான்.

“ரொம்ப நாளைக்கு முன் இந்தப் பாட்டைப் பாடியவனின் ஞாபகம் எனக்கு வந்து விட்டது” என்றாள்.

“யார் அது ?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“அவன் ஒரு இளைஞன். மைக்கேல் ஃபூரே என்று பெயர். அவன்தான் அந்தப் பாடலைப் பாடினான்.மிகவும் இங்கிதமானவன்.”

காப்ரியல் பேசாமலிருந்தான். இந்த ‘இங்கிதமான’ இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள அவன் ஆவலாயிருக்கிறான் என்று அவள் நினைத்து விடக் கூடாது.

“அவனை இப்போதும் என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அவனது கண்கள் ! எவ்வளவு பெரிதானவை ! அவற்றில் தென்பட்ட உணர்ச்சி வெளிப்பாடு !”

“ஓ, நீ அவனைக் காதலித்தாயா ?”

“அவனுடன் நான் வாக்கிங் போவேன். அப்போது நான் கால்வேயில் இருந்தேன்.”

காப்ரியலின் நினைவில் ஒரு பொறி தட்டியது.

“அதனால்தான் அந்த ஐவோஸ் பெண்ணுடன் நீ கால்வே சென்று இருக்க விரும்பினாயா ?” என்று கேட்டான் காப்ரியல்.

அவள் திகைப்புடன் அவனைப் பார்த்து “எதற்காக?” என்று கேட்டாள்.

“எனக்கென்ன தெரியும் ? ஒரு வேளை அவனைப் பார்க்கவென்று…”

அவள் அவனைப் பார்க்காது தொலைவில் நோக்கினாள்.

“அவன் பதினேழு வயதிலேயே இறந்து விட்டான்” என்றாள் அவள். “அவ்வளவு சிறிய வயதில் சாவது மிகப் பெரிய கொடுமை இல்லையா?”

“அவன் என்ன செய்து கொண்டிருந்தான் ?” என்று காப்ரியல் கேலியாகக் கேட்டான்.

“அவன் ஒரு எரிவாயு விற்கும் கடையில் இருந்தான்” என்றாள் அவள்.

ஒரு எரிவாயுக் கடையில் வேலை பார்த்த ஏழை இளைஞனைப் பற்றித்  தான் கேலியாகப் பேசியதை காப்ரியல் அவமானமாக உணர்ந்தான். கிரேட்டா தன்னுடன் காதல் உணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் உண்மையில் அவள் தன் காதலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு முட்டாள், கோமாளி. உணர்ச்சியில் விழுந்து அடி சறுக்குபவன் என்று அவன் தன்னையே நினைத்து இரக்கம் கொண்டான். கிரேட்டா தன்  முகபாவத்தைப் பார்த்துவிடக் கூடாது என்று திரும்பி நின்று கொண்டான்.

அவன்  மறுபடியும் பேச ஆரம்பித்த போது அவன் குரல் எளிமையாகவும் பச்சாத்தாபமின்றியும் இருந்தது.

“நீ அவன் மீது காதல் கொண்டிருந்தாய் என்று நினைக்கிறேன்.”

“எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது” என்றாள் அவள்.

அவளது குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. காப்ரியல் தன் தோல்வியை உணர்ந்தபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“எதனால் அவ்வளவு இளம் வயதில் அவன் இறந்தான் ? ஏதாவது சாப்பிட்டு விட்டு ?”

“எனக்காக அவன் உயிரை விட்டான்” என்றாள் கிரேட்டா.

அந்தகாரம் தன்னைச் சூழ்வது போல காப்ரியலுக்குப் பயம் உண்டாயிற்று.அவன் தான் வெற்றி அடைந்து விட்டோம் என்று இறுமாந்து கொண்டிருக்கும் சமயத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரி ஒருவன் தன்னை அடித்துச் சுக்குநூறாக்குவது போல அவனுக்குப் பயம் உண்டாயிற்று.ஆனால் அதை உதறி விட்டு அவன் அவள் கைகளை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அவளிடம் மேலும் கேள்வி எதுவும் கேட்க அவன் பயந்தான். அவள் கை மிருதுவாகவும் சற்று சூடாகவும் இருந்தது. அவள் கை அவனுக்குப் பதில் எதுவும் தெரிவிக்காவிட்டாலும் அவன் விடாது அவள் கைகளைத் தடவிக் கொண்டிருந்தான்.

“பனிக்கால ஆரம்பத்தில் நான் என் பாட்டியை விட்டு விட்டு இங்கு கான்வென்டுக்கு வருவதாக இருந்தேன். அவன் கால்வேயில் தங்கியிருந்த விடுதியில் ஜூரமென்று படுத்திருந்தான்.அவனது உறவினர்கள் ஆட்டெரார்டில் இருந்தார்கள். அவன் உடம்பு சீர் குலைந்து கொண்டிருந்தது என்று அவர்களுக்குச் சொன்ன ஞாபகம்.”

ஒரு நிமிடம் பேசாமலிருந்து விட்டுப் பெருமூச்செறிந்தாள்.

“பாவம். அவன் ரொம்ப நல்லவன். அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் சேர்ந்து வாக்கிங் போவோம். அவனுக்கு மிக நல்ல குரல். இசையில் ஈடுபாடு இருந்தது.”

“அப்புறம் ?”

“நான் இந்த ஊருக்குக் கிளம்பி வரும் போது, அவனைப் பார்க்க அங்கே நான் அனுமதிக்கப்படவில்லை. அவன் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. கோடையில் வந்து அவனைப் பார்ப்பதாகவும், அதற்குள் அவனுக்கு உடம்பு குணமாகி விடும் என்றும் கடிதம் எழுதி அனுப்பினேன்.”

அவள் குரலைக் கட்டுப்படுத்திக் கொள்ள சில வினாடி மௌனமாக இருந்தாள் . பிறகு குரலைச் சரி செய்து கொண்டு பேசினாள்.

“நான் இரவில் ஊருக்குக் கிளம்புவதற்காகப் பாக்கிங் செய்து கொண்டிருந்த போது ஏதோ வீசியெறியப்பட்டு ஜன்னலருகே விழும் சத்தம் கேட்டது. மழை பெய்து கொண்டிருந்ததால், ஜன்னல் வழியே பார்த்த போது எதுவும் சரியாகத் தெரியவில்லை. நான் கீழே விரைந்து போய்ப் பார்த்தேன். அவன் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குளிரில் விறைத்து நடுங்கியபடி நின்றிருந்தான்.”

“அவனை நீ திரும்பிப் போ என்று சொல்லவில்லையா ?” என்று காப்ரியல் கேட்டான்.

“நான் அவனை உடனடியாக வீட்ட்டுக்குப் போ என்று துரத்தினேன்.

இல்லாவிட்டால் அந்த மழையிலே அவன்  இறக்க நேரிடும் என்று கத்தினேன். ஆனால் அவன் தனக்கு உயிர் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லியபடி நின்று கொண்டிருந்தான். நான் அவன் கண்களை  நேரடியாகப் பார்த்தேன். ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.”

“அவன் வீட்டிற்குப் போனானா ?” என்று காப்ரியல் கேட்டான்.

“ஆமாம். அவன் வீட்டுக்குப் போய் விட்டான். நான் கான்வென்டில் சேர்ந்த ஒரு வாரத்தில் அவன் இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. ஆட்டெரார்டில் அவன் உடல் புதைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அவன் இறந்த செய்தியைக் கேட்ட அந்த தினம் எவ்வளவு மோசமானது!”

அவள் பேசுவதை நிறுத்தி விட்டாள். உணர்ச்சிப் பெருக்கில் விம்மி விம்மி அழுதபடிப் படுக்கையில் புரண்டாள். காப்ரியல் அவளிடமிருந்து விலகி ஜன்னல் அருகில் போய் நின்றான்.

அவள் சற்று நேரத்தில் அமைதியடைந்து தூங்கி விட்டாள்.வாயைப் பாதி திறந்து கொண்டு சீரான மூச்சுடன் தூங்கும் அவளைப் பார்த்தான். அவளுடைய காதல் வாழ்க்கையை அவள் வாழ்ந்து விட்டாள். அவளுக்காகவே ஒருவன் தன்  உயிரை விட்டிருக்கிறான். ஒரு கணவனாக அவளுடன் தான் எவ்வளவு சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று அவனுக்குத் தோன்றியது. அவள் தூங்குவதை பார்த்த போது அவளும் தானும் கணவன் மனைவியாக வாழவில்லை என்று அவன் நினைத்தான். அவனது கண்கள் அவள் முகத்தின் மீதும் கூந்தல் மீதும் பதிந்து நின்றன. அவளது இளமைக் காலத்தில் அவள் எத்தகைய பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது அவனுக்கு உள்ளார்ந்த பரிதாப உணர்ச்சி தோன்றியது. அவள் அழகாயில்லை என்று அவன் தனக்குள்ளாகக் கூட சொல்ல மாட்டான். ஆனால் மைக்கேல் ஃபூரே உயிரைக் கொடுத்த முகமாக இன்று அது இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு வேளை கிரேட்டா அவனிடம் முழு உண்மையைச் சொல்லாமல் மறைத்திருக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்த கொந்தளிப்பான மனநிலையை நினைவுபடுத்திப் பார்த்தான். எதிலிருந்து இச்சிக்கல்கள் ஆரம்பித்தன? அவனது அத்தை வீட்டில் உண்ட உணவு, அவனுடைய முட்டாள்தனமான பேச்சு, குடித்து விட்டு ஆடியது, இரவு வணக்கம் சொன்ன போது போட்ட கூச்சல், ஆற்றோரம் சென்ற போது கிட்டிய மகிழ்ச்சி, இவை எவற்றிலிருந்து அவனது மனக் கொந்தளிப்பு ஆரம்பித்தது? பாட்ரிக் மார்கனும் அவனுடைய குதிரையும் போல ஜூலியா அத்தையும் நிழலாகி விட்டாள். அவள் பாடும் போது எலும்புக்கு கூட்டின் சாயல் அவனுக்குத் தெரிந்தது. அவனும் கறுப்பு உடையை அணிந்து அவனுடைய சில்க் தொப்பியை முழங்கால் மீது வைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஜன்னலின் திரைச் சீலைகள் உள்ளே இழுக்கப்பட்டு அறையெங்கும் குவிந்திருக்கும் இருளில் கேட் அத்தை அழுது கொண்டும் மூக்கை உறிஞ்சிக் கொண்டும் ஜூலியா அத்தை எப்படி இறந்தாள் என்று பேசுவாள். அவன் அவளை சமாதானப்படுத்த வார்த்தைகளைத் தேடி அலைந்து ஒன்றும் கிடைக்காமல் வாய்க்கு வந்ததை வார்த்தைகளாய் இரைப்பான். ஆம். இது விரைவில் நடக்கும்.

குளிர்காற்று அவன் தோளில் வலியை ஏற்படுத்தியது. அவன் மனைவியை ஓட்டிப் படுத்துக் கொண்டான். அவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவர் நிழலாகின்றனர். வேறோர் உலகை நாடிச் செல்வோம், உணர்வுகளின் பெருமிதத்தோடு இங்கே இருந்தால், வயதான பின் வாடி வதங்குவது நிச்சயம். அவனருகில் படுத்திருப்பவள் எவ்வளவு  வருஷங்களாக ‘நான் உயிரோடிருக்க விரும்பவில்லை’ என்று சொல்லி விட்டுச் செத்துப் போனவனை மனதில் இருத்திக் கொண்டு தன்னோடு வாழ்கிறாள்?

காப்ரியல் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகிற்று.அவன் வேறு எந்தப் பெண்ணை முன்னிட்டும் இம்மாதிரி உணர்ந்ததில்லை. இதுதான் காதல் போலிருக்கிறது ! கண்களின் நீர்ப் பெருக்கினூடே மரத்தின் கீழ் நிற்கும் இளைஞனின் கற்பனை உருவம்  தென்பட்டது. அவனது ஆன்மா இறந்தவர்களை சுற்றி வந்தது. தத்தாரியாகக் காட்சி தரும் உலகின் இருப்பை அவனால் உணர முடிந்தது. அவனது அடையாளம் மெதுவாக அழிந்து கொண்டிருந்தது. ஒரு காலத்தில் வாழ்ந்து பின்னர் மரணத்தைத் தழுவியவர்களின் வீழ்ச்சியை  உணர்ந்தான்.

அவன் ஜன்னல் பக்கம் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பனி மறுபடியும் பெய்ய ஆரம்பித்திருந்தது.விளக்கொளியில் வெள்ளியும் கறுப்புமான வண்ணத்தில் பனித்துகள்கள் விழுந்து மின்னின. பத்திரிகைகள் சொன்னது போல அயர்லாந்து முழுவதும் பனி பெய்ய ஆரம்பித்து விட்டது. அது வறண்ட பூமியின் மத்தியிலும், மரங்களற்ற குன்றுகளிலும் விழுந்து கொண்டிருந்தது. அது குன்றின் மேல் தனித்திருந்த சர்ச்சின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஃ பூரே மீதும் பெய்து கொண்டிருந்தது.வளைந்திருந்த சிலுவைகள், புகைபோக்கிகள், சர்ச்சின் உள்ளே வருவதற்கு முன் இருந்த கேட்டு, வளர்ந்து நின்ற காட்டுச் செடிகள் முட்கள் மீது எல்லாம் பனி பெய்து கொண்டிருந்தது. பிரபஞ்சத்தில் வலம் வரும் உயிருள்ள ஜீவன்கள்  மற்றும் ஜடமான பொருட்கள் எல்லாவற்றின் மேலும் பனி நிதானமாகப் பெய்ததை, அவனது ஆன்மா மயங்கிக் கொண்டிருந்த போது அவனுக்குக் கேட்டது.

ஸிந்துஜா-இந்தியா 

Related Articles

Leave a Reply

Back to top button