கட்டுரை

விமானத்தில் செல்லும் விமானிகளுக்குத் தனித்தனி உணவு – காரணம் இதுதான்!!

Separate food for pilots

விமானப் பயணங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை எவராலும் மறுக்க இயலாது. விமானங்களில் பாதுகாப்பிற்காக பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

அவற்றில் ஒன்று, விமானிகளும், உடன் செல்லும் விமானிகளும் ஒரே உணவைச் சாப்பிட மாட்டார்கள்… இது ஏன் தெரியுமா?

ஒரு உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தாலோ அல்லது அது ஒவ்வாமை உணவாக அல்லது உணவு விசமாக (Food Poison) மாறியிருந்தாலோ ஒரு விமானி மட்டுமே பாதிக்கப்படுவார். மற்றொரு விமானி பாதிப்படைய மாட்டார். எனவே அவர் மேற்கொண்டு பணிகளைத் தொடரலாம். இதன் காரணமாக, விமானங்களின் விமானிகள், உடன் செல்லும் விமானிகளுக்கு வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பான்மையான விமான நிறுவனங்கள், விமானிகளின் உணவு தொடர்பாகத் தங்களுக்கெனத் தனி விதிகளை வகுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக விமானங்களில் செல்லும் விமானிக்கு உணவு ஒவ்வாமை அல்லது உணவு விசம் ஏற்படுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வுதான். அதற்காக வாய்ப்பே இல்லை என்று கூறி விட முடியாது. இதற்கு முன்பாக விமான ஊழியர்கள் உணவு விசத்தால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

கடந்த 1982ம் ஆண்டு, பாஸ்டன் நகரில் இருந்து லிஸ்பன் நகருக்கு பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில், 10 ஊழியர்களுக்கு உணவு விசமாக மாறியிருந்தது. இதில், விமானி, உடன் செல்லும் விமானி மற்றும் விமானத்தின் பொறியாளர் ஆகியோரும் இருந்தனர். மரவள்ளிக் கிழங்கால் சமைக்கப்பட்ட ஒரு உணவை உட்கொண்டதால், அவர்களுக்குத் தரப்பட்ட உணவு விசமாக மாறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான விபரீதமும் அப்போது நடைபெறவில்லை. விமான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விசமாக மாறியதால், அந்த விமானம் மீண்டும் பாஸ்டன் நகருக்கேத் திரும்பி, பத்திரமாக தரையிறங்கி விட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக்கூடாது என்பதற்காக, விமானி மற்றும் உடன் செல்லும் விமானி ஆகியோருக்கு வெவ்வேறான உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு சில விமானங்களில், படிநிலை அடிப்படையில்தான் விமானி மற்றும் உடன் செல்லும் விமானிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. பணி மூப்பு அடிப்படையில், உணவு வழங்கும் நடைமுறையை ஒரு சில விமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

அதாவது, விமானங்களின் விமானிகளுக்கு முதல் தரமான உணவு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், உடன் செல்லும் விமானிகள், வணிகப் பிரிவிலிருந்துதான் தங்கள் உணவைப் பெறுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

பா. காருண்யா,

Related Articles

Leave a Reply

Back to top button