மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், 2 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகள் 75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே தோற்கடித்தார்கள் என்றும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் இல்லாத இந்த சூழ்நிலையில், இராணுவத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என சில தரப்பினர் இங்கு குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், ஒரு நாட்டில் யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவக் கட்டமைப்பு பலமானதாக இருக்க வேண்டும்.
தேசிய ரீதியாக அச்சுறுத்தல் இல்லாவிட்டால்கூட சர்வதேச ரீதியாக வரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், இராணுவம் தயார் நிலையிலேயே இருக்க வேண்டும். நாம் அஞ்சிக்கொண்டு வாழ வேண்டியத் தேவையில்லை.
80 களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் 2500 பேரளவிலேயே இருந்தார்கள். இதன்போது 75 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வந்தார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகள் அவ்வளவு குறைவான ஆட்களை வைத்து இந்திய இராணுவத்தையே தோற்கடித்தார்கள். இதுதொடர்பாக இலங்கையர் என்று நாம் பெருமையாகக்கூட கருத முடியும்.
எனவே, சிறிய நாடு என்று நாம் எவருக்கும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டால், பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.
90 களில் எமது இராணுவத்தில் 70 ஆயிரம் இராணுவத்தினரே இருந்தார்கள். இராணுவம் ஆட்பலத்தில் பலவீனமாக இருந்த காரணத்தினால்தான் யுத்தம் நீடித்தது.
அன்று எமக்கு 90 ஆயிரம் இராணுவத்தினர் இருந்திருந்தால், அன்றே யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
கொழும்பு மாவட்டத்தைப் போன்ற பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர், தமது நாட்டின் பாதுகாப்புக்கென அவுஸ்ரேலியா, வியட்நாம், தாய்லாந்தை விட அதிக நிதியை ஒதுக்குகிறது.
பாதுகாப்பு அமைச்சுக்கென 30 பில்லியன் ரூபாய் இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், இதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது கருத்தாகும். ஆட் பலம், ஆயுத பலம் இன்னும் பலமடைய வேண்டும்.
அத்தோடு, இன்று மாவீரர் நினைவு தொடர்பாக ஒரு கருத்தைக் கூறியே ஆகவேண்டும். இதனை கட்டாயமாக நாட்டில் தடைசெய்தே ஆக வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எமது கட்சியின் நிலைப்பாடும் இதுவே. இவர்களின் அனுமதியுடன்தான் நான் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தின்போது, மாவீரர் தினம் அனுஷ்டிக்கும் ஒரு நாட்டில் வாழ்வது சாபத்துக்குரியது என கண்ணீர் மல்கப் பேசியது எனக்கு நினைவில் உள்ளது.
எனவே, மாவீரர் நினைவு நாளை நாம் தடை செய்தே ஆக வேண்டும். இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் தீவிரமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவது எமக்கு பிரச்சினையல்ல. ஆனால், அதற்காக பிரபாகரனின் பிறந்த நாளை தெரிவு செய்வதுதான் பிரச்சினைக்குரியதாகும்.
பிரபாகரனை அவரது உறவினர்கள் நினைவுகூரிக் கொள்ளட்டும். விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, இதன் உறுப்பினர்களை நினைவுக்கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
மாவீரர் நினைவு நாளும், ஜே.வி.பியின் நினைவு நாளும் சமமானது கிடையாது. ஜே.வி.பி. இந்நாட்டின் அரசியல் கிளர்ச்சியொன்றை மேற்கொள்ளவே முற்பட்டார்கள். இதற்காக ஆயுதம் ஏந்திய காரணத்தினால்தான் அரசாங்கம் அவர்களை கட்டுப்படுத்தியது.
மாறாக, விடுதலைப் புலிகள் போன்று ஒரு நாட்டை இரண்டாக பிளவடைய வைக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம் கிடையாது. அல்லது ஒரு இனத்தை இலக்கு வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை.
இன்று கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு புலிக்கொடியுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கிறார்கள்.
தங்களின் நோக்கத்திற்காக இன்னமும் வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, ஜே.வி.பியும் விடுதலைப் புலிகளும் ஒன்று கிடையாது.
நாம் வடக்கு அரசியல்வாதிகளுடன் மிகவும் நட்பாக இருக்கிறோம். அவர்களுக்கும் எமக்கும் நெருங்கியத் தொடர்பு காணப்படுகிறது.
ஆனால், ஒரு சில வடக்கு அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நோக்கத்திற்காகவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் மீண்டும் தெற்கு மக்கள் மனங்களில் கோபத்தை விதைக்கவே இவர்கள் முற்படுகிறார்கள். இதனை செய்ய வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
ரஜீவ் காந்தி, ரணசிங்க பிரேமதாஸ, ரஞ்சன் விஜயரத்ன போன்ற அரசியல் தலைவர்களை கொன்றவர்களை, தேரர்களை பேரூந்தில் வைத்து படுகொலை செய்தவர்களை, தளதா மாளிகை மீது தாக்குதல் நடத்தியர்களை, ஸ்ரீமா போதி மீது தாக்குதல் நடத்தியவர்களை, காத்தான்குடி பள்ளியில் முஸ்லிம்களை கொலை செய்தவர்களை, அமிர்தலிங்கத்தை கொலை செய்தவர்களை, கிராமங்களுக்குள் புகுந்து பொது மக்களை கொலை செய்தவர்களையே மாவீரர் தினத்தின் ஊடாக நினைவுகூர முற்படுகிறார்கள்.
இவ்வாறானவர்களை நினைவுகூர அனுமதிக்கும் அளவுக்கு நாம் கீழ்மட்டத்துக்கு செல்லவில்லை. அத்தோடு, அரசியல்கைதிகளை விடுதலை செய்வதை நாம் முழுமையாக வரவேற்கிறோம்.
அப்படியாயின், என்னைக் கொலை செய்ய குண்டுகளைக் கொண்டு வந்த மொரிஸ் என்பவரை முதலில் விடுதலை செய்ய வேண்டும் என நான் அரசாங்கத்திடம் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்