உராய்வு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கனியவளக் கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு இன்றைய தினம் வரையில் மாத்திரமே உராய்வு எண்ணெய்யை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை காரணமாக இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிற்பகல் 2 மணிவரையிலான காலப்பகுதிக்கு மாத்திரம் அவசியமான உராய்வு எண்ணெய் மின்னுற்பத்தி நிலையத்தின் கையிருப்பில் உள்ளதாகவும் பொறியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் தற்போது சீராக இயங்குகின்றது.
இதன்படி, களனிதிஸ்ஸ கூட்டு வட்ட மின் நிலையத்தில் இருந்து 165 மெகாவோட் அலகு மின்சாரமும், களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் இருந்து 115 மெகாவோட் அலகு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையிடம் இருந்து கிடைக்கப்பெற்ற டீசல் தொகையானது எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.