பயங்கரவாதத் தடைச் சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டில் நாம் அன்றும் இன்றும் உறுதியாக நிற்கின்றோம்.”
-இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய அளவில் கையெழுத்துக்களைச் சேகரித்து வருகின்றனர். இதில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கையொப்பமிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக மோசமானது. அதில் திருத்தங்களை மேற்கொள்வதால் பயனில்லை. அந்தச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். மக்களின் உரிமைகளை – சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கருமம் ஆற்றப்பட வேண்டும்” – என்றார்.