அடுத்து வரும் மூன்று வாரங்களும் அவதானமிக்க வாரங்கள் என்பதால் பொதுமக்கள் பொதுச் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடப்பது அவசியம் என்று தொற்றுநோய் பிரிவின் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொதுமக்கள் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் நாடு மீண்டும் அபாயகரமான நிலைமைக்கு ச் செல்லும்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன. எனினும், இந்த நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு, தடுப்பூசி செலுத்துவதைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
கொரோனாத் தடுப்புக்கான மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இளைஞர், யுவதிகள் ஆர்வம் செலுத்தவில்லை.
இது ஆபத்தான நிலை. முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மூன்று மாதங்களின் பின்னர் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று தொற்று நோய் பிரிவு கோரிக்கை விடுக்கின்றது.
தற்போதைய நிலையிலும்கூட கொரோனா வைரஸ் பரவும் அபாயம் நீங்கவில்லை. எனவே, பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவது அவசியமாகும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்