உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தமை ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“எரிவாயு வரிசை, பால்மா வரிசை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். மக்களின் அடி பயங்கரமாக இருக்கும் என்பதால்தான், தேர்தலுக்கு அஞ்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்துள்ளது. இதனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாகப் போலித் தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பக்கூடாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தமை ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும்” – என்றார்.