மூன்று வேளையும் சாப்பிட்டு நலமாக வாழ்ந்த மக்கள் இன்று மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர் எனவும் உரத்தைத் தடை செய்த அரசு பயிர்ச் செய்கை மேற்கொண்ட மக்களின் வருமானத்தை அழித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை முல்கிரிகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மித்தெனிய தலைமை அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை தொடரும் அதேவேளை இன்று எமது நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடும் குறைந்துள்ளது. இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசின் பதில் கொரோனாத் தொற்றே.
கொரோனா பேரழிவின் மத்தியிலும் எழுச்சி பெற்ற நாடுகள் இருப்பதை அரசு மறந்துவிட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு வந்தவுடனேயே தொழில் அதிபர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் வரிச்சலுகை வழங்கிய அரசே இன்று ஏற்பட்ட இந்த பாரிய வீழ்ச்சிக்குப் பொறுப்பு.
ஏறக்குறைய அனைத்து சர்வதேச நிதி மதிப்பீடுகளிலிருந்தும் நாடு அதிக ஆபத்தில் இருக்கின்றது” – என்றார்.
செய்தியாளர் – சுடர்