இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் – முன்னாள் போராளி தெரிவிப்பு!!

S. Aravindan

இவ்வருடம் இடம்பெற்ற மாவீரர் தினத்தில் வாழை மரத்தில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் கொழும்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் போராளியான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அது எமது பாரம்பரிய கலாச்சாரத்தின் முறைமை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்றோம். மாறாக விடுதலை புலிகளின் தடை செய்யப்பட்ட கொடி போன்ற பொருட்களை எதனையும் நாங்கள் எங்கும் காட்சிப்படுத்தி நினைவு கூரவில்லை . நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி நாங்கள் எதனையும் செய்யவில்லை . சட்டத்திற்கு உட்பட்டு எமது உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்றோம் இதற்காக நீதிமன்றம் வரையும் சென்றிருக்கின்றோம் .

எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு வரையும் சென்று பல்வேறு அரச தரப்பு பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வலியுறுத்தியிருந்தோம் . கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி எனது சாட்சியத்தை வழங்கியிருந்தேன் , அதற்குப்பின்னர் எம்மை அச்சுறுத்தும் செயற்பாடாகவே என்னை பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டதாகவே இதனைக் கருதுகின்றேன் . இவ்வாறான விசாரணைகள் முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் மீது சுமத்தப்படும்போது நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம் .

இச் செயற்பாட்டினால் எமது நாட்டிற்கும் எமது ஜனநாயகத்திற்குமான எமது குரல்கள் வாய்களை மூடக்கூடிய ஒரு விடங்களை இவர்கள் கையாள்கின்றார்கள் . பயங்கரவாத பிரிவினருக்காக நாங்கள் சில குற்றங்களை ஏற்றுக்கொண்டு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன் . மக்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இந்த நினைவேந்தல்களை மேற்கொண்டு வருகின்றோம் . என்பதையும் எனது விசாரணையின் போது பதிவு செய்திருந்தேன் என்று மேலும் தெரிவித்துள்ளார் .

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button