நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதால் டொலர் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசின் திட்டமிடலற்ற வேலைத்திட்டங்களின் காரணமாக புத்தாண்டு தினத்திலும் சமையல் எரிவாயு மற்றும் பால்மா என்பவற்றுக்காகப் பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து தமது பிள்ளைகளுக்காக மக்கள் இவ்வாறு வரிசையில் காத்திருப்பது கவலைக்குரியதாகும். புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு எவ்வித வசதிகளும் இன்றி, பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விடுமுறையில் தனது சொந்த ஊரான அமெரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பியுள்ளார்.
டொலர் நெருக்கடியின் காரணமாக நாடு நாளாந்தம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனினும் 3.1 பில்லியன் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள கடன் தொகையைக் கணக்கில் சேர்த்துத்தான் மத்திய வங்கி ஆளுநர் இந்த மாயாஜாலத்தை காண்பித்துள்ளார் என்று எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் மூலம் தெரியவருகின்றது.
சீனாவிடமிருந்து யுவான்களாகவே கடன் கிடைக்கப் பெறும். எனினும், அதனை நாம் டொலர்களிலேயே மீள செலுத்த வேண்டியேற்படும். அவ்வாறெனில் இந்தக் கடன் தொகை மூலம் எமக்குக் கிடைக்கும் நன்மை என்ன? இந்தியாவின் கடன் திட்டத்தின் மூலம் நாட்டுக்குத் தேவையான அரிசி, கிழங்கு, வெங்காயம், மரக்கறி மற்றும் பழங்கள் என்பவற்றைப் பெற முடியும். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடுவதை எவராலும் தடுக்க முடியாது.
சீனாவிடமிருந்து கிடைக்கும் கடன் தொகையைப் பொருள் இறக்குமதிக்காக அந்நாட்டு சந்தைக்கே மீண்டும் அனுப்ப வேண்டியேற்படும். காரணம் வேறு எந்த நாட்டிலும் யுவான் புழக்கம் கிடையாது.
டொலர் நெருக்கடிக்கு அரசால் தீர்வைக் காண முடியாமல் போயுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக மத்திய வங்கியின் அனுமதியின்றி ஏனைய வங்கிகளால் டொலரை வழங்க முடியாது.
டொலர் இன்மையால் தம்மால் கடன்சான்று பத்திரத்தை விடுவிக்க முடியாமலுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் திகதி அரசு கோடிக்கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலர் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நாணயத்தாள்களை அச்சிடுவதால் இலங்கை ரூபாவின் பெறுமதியைப் பாதுகாக்க முடியுமா? அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை இதன் மூலம் வழங்க முடியும். வேறு எதனையும் இவ்வாறு நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலம் செய்ய முடியாது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. ஆனால், இவற்றில் எதைப் பற்றியும் அரசுக்கு அக்கறையில்லை.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அமைச்சர்கள் எரிவாயு நிறுவனத் தலைவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு நிறுவனத் தலைவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மாறாக பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு அமைச்சர்கள் அவரவர் கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர்களை ஜனாதிபதியே நியமித்துள்ளார். எனவே, அவரிடமே இது பற்றி கேள்வியெழுப்ப வேண்டும்.
இவ்வாண்டில் பஞ்சம் ஏற்படும் என்று விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அரசு அதனை மறுக்கின்ற போதிலும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை மற்றும் விவசாய பயிர்ச் செய்கைகள் 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமை என்பன விவசாய நிபுணர்களின் எச்சரிக்கை உண்மை என்று நிரூபிக்கின்றன.
முறையற்ற நிர்வாகத்தினால் 2021 முழுமையாக சீரழிந்தது. 2022ஆம் ஆண்டும் அதேபோன்றுதான் ஆரம்பித்துள்ளது.
ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இவர்கள் பழைய பாதையிலேயே பயணிப்பர். முகங்கள் மாற்றமடைகின்றன என்பதற்காக நாடு மாற்றமடையப் போவதில்லை.
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே காணப்படுகின்றது.
எனவே, எதிர்காலத்திலும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சுபீட்சமான காலம் மலரும்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்