கொழும்பு மாநகர சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியவற்றுக்கு இடையில், நகர இணைப்புத் திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை முன்னெடுக்கும் முகமாக, இன்று அவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், கொழும்பு மாநாகர சபைக்கும், யாழ்ப்பாணம் மாநாகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபைக்கும் இடையில், நகர இணைப்பு திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வாழும் மக்களில், மூன்றிலிரண்டு பங்கினர் தமிழர்களாவர்.அவர்களில் பெருமளவானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
எனவே, அந்த மக்களுக்காக, மாநகர சபை என்ற அடிப்படையில், இன, மத பேதமின்றி நல்லிணக்கத்தை அடிப்படையாக்கக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளோம்.
கொழும்பு நூலகத்திலிருந்து யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, 400 புத்தகங்களைக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநாகர சபைக்கும், கொழும்பு மாநாகர சபைக்கும் இடையில் நட்புறவு கிரிக்கட் போட்டி ஒன்றும் இன்று நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாநாகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபைக்கு, கொழும்பு மாநாகர சபையால் எவ்வாறு இணக்கத்துடன் உதவி புரிவது மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து தங்களிடம் கற்றுக்கொள்ள மற்றும் பெற்றுக்கொள்ள வேண்டியற்றைப் பெறுவதே இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாகும் என கொழும்பு மாநாகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.