துபாய் நகரில் அமைந்துள்ள குடியிருப்புகளில் உள்ள பெல்கனிகளை (மாடிமுகப்பு) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து துபாய் நகரசபை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
துபாயில் வசிப்பவர்கள் நகரம் முழுவதும் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் என்றும் தங்கள் அடுக்குமாடி பெல்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் துபாய் நகரசபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் பெல்கனிகளை தவறாகப் பயன்படுத்தி அதன்மூலம் சமூகப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது.
பிறருடைய கண்களை உறுத்தும் விதத்தில் பெல்கனிகள் அமையக்கூடாது.
இதனை உறுதிசெய்ய அவர்கள் தவிர்க்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றி நகரசபை குடியிருப்பாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.
நிலையான சுற்றுச்சூழலுக்கான தேவைகள் மற்றும் தரநிலைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நகரத்தின் பொதுவான அழகியல் மற்றும் நாகரீக தோற்றத்தை சிதைப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து ஐக்கிய அரபு இராச்சிய குடியிருப்பாளர்களுக்கு துபாய் நகரசபை ட்விட்டரில் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பெல்கனியில் ஆடைகளை உலர்த்துதல், சிகரெட் துகள்களை பெல்கனியில் இருந்து வெளியே வீசுதல், பெல்கனியில் இருந்து குப்பைகளை வீசுதல், பெல்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீரை வெளியேற்றுதல், பறவைகளுக்கு பெல்கனியில் உணவளித்தல் மற்றும் பெல்கனியில் தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.