பதவி இழந்ததாக செய்திகள் வெளியான போதிலும் சபை நடவடிக்கைகளில் வழமைபோன்று பங்குபற்றினார் ரெபுபாசம்.
கட்சிக்கு எதிராக செயற்பட்டதால் ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ரெபுபாசத்தை, கட்சியிலிருந்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவரை நீக்கியுள்ளதாக கடந்த ஞாயிறன்று 26.12.2021 செய்திகள் வெளியாகியிருந்தது.
இருப்பினும் வியாழக்கிழமை 30.12.2021 இடம்பெற்ற ஏறாவூர் நகர சபையின் 45வது மாதாந்தக் கூட்டத்தில் அவர் வழமைபோன்று பங்குபற்றினார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல். ரெபுபாசம், பட்டியல் ஆசனத்தினூடாக ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவராவார்.
நகர சபைத் தவிசாளர் தெரிவின்போது கட்சியினுடைய தீர்மானத்தை புறக்கணித்தும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதால் அவருக்கெதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.
மேற்படி ஒழுக்காற்று விசாரணைகளின் தீர்ப்பையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்தும் அவரை வெளியேற்றியுள்ளது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்து.
இதன்படி, ஏறாவூர் நகர சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினரின் பதவி நீக்கப்பட்டமை குறித்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் அவர் வியாழக்கிழமை 30.12.2021 ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்ற அச்சபையின் 45வது அமர்வில் பங்குபற்றியிருந்தார். செய்தியாளர் – வ.சக்திவேல்