இலங்கைசெய்திகள்

மீனவர்கள் விடுதலை – இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை!!

released

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னின்று செயற்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், தடுப்பில் உள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அத்துடன், அவர்களுக்கான சட்டபூர்வ பிரதிநிதித்துவத்துக்கான ஏற்பாடுகள் மெற்கொள்ளப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடல் எல்லையினை மீறி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 18ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 68 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இதற்காகப் பயன்படுத்திய 10 படகுகளும் கடற்படையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை அவர்களது படகுகளுடன் விடுவிக்கக் கோரியும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யாவிடின், எதிர்வரும் 1ம் திகதி தங்கச்சிமடத்தில் தொடருந்து பாதையை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் எனவும், அவர்களது படகுகள் அரசுடைமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதனைக் கண்டித்த தமிழக மீனவர்கள், இருநாட்டு மீனவர்களிடமும் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Related Articles

Leave a Reply

Back to top button