கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 அரசியல் கைதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் எவையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.
குறித்த நபர்கள் குறித்து உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட பல்வேறு தரப்புக்களிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர்கள் ஐவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஒப்படைக்கப்பட்டவர்களைப் பொறுப்பேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அவர்களைத் தத்தமது வீடுகளில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, விரைவில் வைத்தியர் சிவரூபனும் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.