இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அரசு ஒமிக்ரோனைக் கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒமிக்ரோன் வேகமாகப் பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில் புரியவோ அல்லது பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்கவோ முடியாது.
பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தடுப்பதற்காக அரசு ஒமிக்ரோனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையாகப் பாடுபட்டனர்.
ஆனால், ஐரோப்பா ஒமிக்ரோனால் என்ன பாடுபடுகின்றது என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.
ஐரோப்பாவில் 50 வீதமானவர்கள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தொழில்புரிய முடியாத நிலை காணப்படுகின்றது.
ஒமிக்ரோன் வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், உயிரிழப்புகள் குறைவு. ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
புதிய வைரஸ் குறித்தும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அரசு அறிவிக்க வேண்டும்” – என்றார்.