இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ராஜபக்ஷ குடும்பத்தினரைப் போல பொய் வாக்குறுதி வழங்கும் படுமுட்டாள் அல்ல நான் – ரணில் ஆவேசம்!!

Ranil

(நமது விசேட செய்தியாளர்)

“இலங்கையில் கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளால்தான் நாடு இன்று மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. நானும் அவர்கள் போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி ‘படுமுட்டாள்’ என்ற பெயரைக் கேட்க விரும்பவில்லை.”

  • இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு கிடைக்குமா?’ என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று பிரதமரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களின் கட்சிக்குப் பெரும்பாலான மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சிப்பீடம் ஏற்றினார்கள். ஆனால், இறுதியில் நடந்தது என்ன? எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. ஆணை வழங்கிய மக்களே ராஜபக்ச குடும்ப ஆட்சி வேண்டாம் என்று போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

நானும் ராஜபக்ச குடும்பத்தினர் மாதிரி பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கத் தயாரில்லை. தற்போதைய பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவே கூடாது.

இம்மாதத்தின் ஆரம்பத்தில் நான் சொன்ன மாதிரி பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றரை வருடங்களாவது தேவை. அதேவேளை, சர்வதேசமும் தொடர்ந்து உதவிகளை வழங்கினால்தான் குறித்த காலப்பகுதிக்குள் நாட்டை மீட்டெடுக்க முடியும்.

நான் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற நாளிலிருந்து நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரத்தைத்தான் கூறி வருகின்றேன். எனது கருத்துக்களை எடுத்துக்காட்டி எதிரணியினர் அரசியல் நடத்துகின்றனர். பிரச்சினைகளையும், இயலாமைமையும் கூறும் பிரதமர் எதற்கு என்று அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இது அவர்களின் சிறுபிள்ளைத்தன அரசியலைக் காட்டுகின்றது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button