இந்தியாசெய்திகள்

மன உறுதியால் கின்னஸில் இடம்பிடித்த இளைஞர்!!

உங்கள் மன உறுதி வலிமையாக இருந்தால், கண்டிப்பாக வெற்றி உங்களை வந்தடையும் என்று சொல்வார்கள்.

எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் நாட்டமும் இருந்தால், நம் சொந்த உடல் உட்பட எதுவுமே தடையாக இருக்க முடியாது. தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் 26 வயதான பிரதீக் விட்டல் மோஹிதே இதேபோன்ற ஒன்றை செய்துகாட்டியுள்ளார்.

பிரதீக் உலகின் மிக உயரம் குறைந்த போட்டி பாடிபில்டர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். அவரது உயரம் 3 அடி 4 அங்குலம் மட்டுமே.

கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய மூன்று முறை முயற்சித்ததாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டதாகவும், ப்ரதீக் தெரிவித்தார்.

ஆனால் அவர் முழு தயாரிப்புடன் தனது பெயரை நான்காவது முறையாக அனுப்பினார். அது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது உலக சாதனை பட்டம் அவரது பெயருக்கு வந்துவிட்டது.

பள்ளி-கல்லூரியில் கேலி

பாடிபில்டர் பிரதீக் விட்டல் மோஹிதேயின் குறைவான உயரம் காரணமாக பலர் அவரை கேலி செய்தனர். ஆனால் இந்த உயரக்குறைவை தனது ஆயுதமாக பயன்படுத்தி, வெற்றிக் கதையை எழுதினார் பிரதீக்.

“என் உயரம் காரணமாக நான் நாய்களைக் கண்டு மிகவும் பயப்படுவேன். பல நேரங்களில் நாய்கள் என்னைத் தாக்கும். ஏனென்றால் அவற்றுக்கு நான் மிகவும் வித்தியாசமாகத்தெரிந்தேன். அதனால்தான் நான் உடல் வளர்ப்பை(பாடி பில்டிங்) ஆரம்பித்தேன்,” என்று பிபிசி ஹிந்தியிடம் பேசிய பிரதீக் தெரிவித்தார்.

“பள்ளி, கல்லூரிக்கு செல்லும் போது, லோக்கல் ட்ரெயினில் பலரை சந்திப்பேன். சிலர் என்னைப் பார்த்து சிரிப்பார்கள், சிலர் கேலி செய்வார்கள். எல்லோருக்கும் நான் பதில்சொல்லவேண்டுமென்றால் தினமும் நூறு சண்டை போடவேண்டியிருக்கும். அது எனக்கே பிரச்சனையாக இருக்கும் என்பதால் இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு என் வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்,” என்றார் அவர்.

அதன்பிறகு மக்களின் கேலிகள் மற்றும் ஏச்சுபேச்சுகள் மீது கவனம் செலுத்துவதை நிறுத்தியதாக பிரதீக் கூறுகிறார். என்னை ஊக்குவிப்பவர்களின் வார்த்தைகளை மட்டுமே நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயணம் எளிதானது அல்ல

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது குறித்துப்பேசிய பிரதீக் , “நான் 2016ஆம் ஆண்டு உடற்கட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பொது வெளியில் சென்று, மேடையில் என் உடலைக்காட்ட பயந்தேன். என் வீடியோவை யாராவது எடுத்து, அதை நகைச்சுவையாக வைரலாக்கிவிடுவார்களோ என்று அஞ்சினேன்,” என்றார்.

“ஆனால் என் பயத்தை அடக்கிக் கொண்டு, எதையாவது செய்துகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் மேடை ஏறியதும் மக்களின் அதீத அன்பைப் பெற்றேன். இதைப் பார்த்து தைரியம் அதிகரித்து, படிப்படியாக பல போட்டிகளில் பங்கேற்றேன்,” என்று அவர் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவுக்காக போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றதாக அவர் கூறினார். 2018 முதல் தொடர்ந்து தேசிய அளவில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு அவர் பஞ்சாபின் லூதியானாவில் தேசிய விளையாட்டில் பங்குகொண்டார்.

மோஹிதே

உலக சாதனை படைக்கும் போராட்டம் குறித்து பேசிய அவர், “என்னுடைய நண்பர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை குறித்து என்னிடம் கூறினார். அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் அதற்கு விண்ணப்பித்தேன். அவர்கள் என்னை மூன்று முறை நிராகரித்தனர்,” என்றார்.

“இதற்குப் பிறகு இணையத்தில் பல செய்திகளைப் படித்து, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டேன். நான் போட்டிக்கான தலைப்பை தவறாகக் கொடுத்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் என்னிடம் பல சான்றிதழ்களைக் கேட்டனர். எனது உயரம் எவ்வளவு, உயரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறதா, பாடி பில்டிங் மற்றும் பல போட்டிகளில் பங்கேற்றதற்கான சான்றிதழ்களை அளிக்குமாறு சொன்னார்கள்.”

அதன்பிறகு இந்தத் தகவல்களை எல்லாம் அவர்கள் சரிபார்த்தபிறகு, உலகின் மிகக் குறைந்த உயரம் கொண்ட ‘போட்டி பாடிபில்டர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க முடிந்தது என்று பிரதீக் கூறினார்.

’12 வயதில் நான் வித்தியாசமானவன் என்று தெரிந்துகொண்டேன்’

ராணுவ வீரராக வேண்டும் என்று சிறுவயதில் பிரதீக் கண்ட கனவு, அவருக்கு சுமார் 12 வயது இருக்கும் போது கலைந்தது.

தனக்கு 12 வயதானபோது இனி தனது உயரம் அதிகரிக்காது என்றும் மற்ற குழந்தைகளிடமிருந்து தான் வேறுபட்டவன் என்பதையும் பிரதீக் புரிந்துகொண்டார்.

“இதை உள்வாங்கிக்கொள்வது என் பெற்றோருக்கு எளிதாக இருக்கவில்லை. வீட்டில் அனைவரும் சோகமாக இருந்தனர். என்னை’ ‘மாற்றுதிறனாளி ஹாஸ்டலில்’ சேர்த்தனர். அங்கு 3 ஆண்டுகள் படித்தேன். பேசுபவர்களின் வாயை மூட முடியாது என்று அங்கு இருந்தபோது நான் புரிந்து கொண்டேன். பிறகு நான் பட்டப்படிப்பை முடித்தேன்,”என்று அவர் தெரிவித்தார்.

படிப்பில் அதிக ஆர்வம் இல்லாததால் விளையாட்டில் கவனம் செலுத்தியதாக அவர் கூறுகிறார்.

“எனது கடின உழைப்பு இறுதியாக பலனளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்யும்போது, என் குடும்பத்தில் யாருக்குமே நம்பிக்கை இருக்கவில்லை. அதாவது நான் உலகின் மிகவும் குறைவான உயரம் கொண்ட பாடிபில்டர் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால். சாதனை பதிவு செய்யப்பட்டபோது, குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.”என்று பிரதீக் குறிப்பிட்டார்.

மோஹிதே

தனது வெற்றிக்கு குடும்பத்தினர்தான் காரணம் என்று அவர் கூறுகிறார். “எனது குடும்பம் காரணமாகவே நான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. அப்பா தான் சம்பாதித்ததில் கொஞ்சத்தை எனக்குக் கொடுப்பார். மற்றவர்களின் ஆடைகளைத் தைத்து சம்பாதித்த பணத்திலிருந்து அம்மா எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பார். ஏனென்றால் பாடிபில்டிங்கிற்கு நிறைய பணம் தேவை,” என்று அவர் சொன்னார்.

“வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும், போட்டியில் கலந்துகொள்வதற்கும், அங்கு செல்வதற்குமான எல்லா செலவுகளையும் நான்தான் செய்யவேண்டியிருந்தது. மேலும் உணவையும் கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது,” என்றார் அவர்.

கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ள பிரதீக் தனது வருங்கால கனவு பற்றியும் பேசினார். “நான் மிஸ்டர் வேர்ல்டுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டு இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு வர விரும்புகிறேன்,”என்று அவர் சொன்னார்.

தன்னைப் போன்ற உயரம் குறைந்தவர்களுக்கு ஒரு செய்தியை அளித்த அவர், “என்னைப் போன்றவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னெவென்றால் நம் உயரம் குறைவாக இருக்கலாம், ஆனால் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. நம் உயரம் குறைவுதான். ஆனால் நம் சிந்தனை எப்போதும் பெரிதாக இருக்கவேண்டும்,”என்று சொன்னார்.

“ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும். கடவுள் நமக்கு எதையாவது குறைவாகக் கொடுத்திருந்தால், அவர் ஏதாவது ஒரு சிறப்பை நிச்சயம் நமக்கு தந்திருப்பார். அந்த சிறப்பை நாம் கண்டுபிடித்து அதை உலகிற்கு காட்ட வேண்டும்,” என்று கூறினார் பிரதீக்.

Related Articles

Leave a Reply

Back to top button