இலங்கைசெய்திகள்

பிரதேச சபை ஊழியர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து தவிசாளர் ரஜனி கருத்து!!

poratheevupattu

எமது பிரதேச சபையில் அமைய அடிப்படையில் கடமை புரிகின்ற ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற கவன ஈர்ப்பு போராட்டம் மிகவும் நியாயமானதாகும். அவர்களில் சுமார் 8 வருடங்களாக கடமையாற்றுகின்றவர்களுக்குக்கூட இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு இதே அரசாங்கத்திலுள்ள பிரமதமர் அப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் வழங்கப்பட்ட தற்காலிக நியமனங்கள்கூட இன்னும் நிரந்தரமாகக்கப்படவில்லை. என போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையில் அமைய அடிப்படையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமக்குரிய நிரந்தர நியமனம் வழங்குமாறு தெரிவித்து புதன்கிழமை(01) பிரதேச சபையின் முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை ஊழியர்கள் பிரதேச சபைத் தவிசாளர் யோ.ரஜனியிடம் வழங்கினர். மகஜரைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில் இந்த தொழிலாளர்களை அரசாங்கம் மிக விரைவில் நிரந்தரமாக்குவதற்கு முன்வர வேண்டும். 180 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட எமது போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மக்களுக்குரிய சேவையை நாம் வழங்குவதற்கு அமைய அடிப்படையில் இதுவரையில் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொழிலாளர்கள், நூலக உதவியாளர்கள், உள்ளிட்ட ஊழியர்களின் நிரந்தர நியமனம் என்பது காலத்தின் கட்டாயமானதாகும்.

கொரோனா காலத்திலும்கூட ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த போதும் எமது இந்த ஊழியர்கள் தமது உயிரை துச்சமென நினைத்து மிகவும் பொறுப்புணர்வுடன் கடமையாற்றினார்கள். அரசாங்கம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திலாவது தொழில்கள் பயிற்றப்பட்ட இந்த ஊழிகயர்களுக்கு நியமனம் வழங்கியிருக்கலாம். எனினும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னராவது இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.

எமது பிரதேச சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் மூன்று ஆளுனர்கள் மாறி மாறி வந்துள்ளார்கள். அவர்கள் அனைவரிடமும் எமது சபையில் 38 பேர் அமைய அடிப்படையிலும்இ 18 பேர் பதிலீட்டு அடிப்படையிலும் கடமையாற்றுகின்றவர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் எடுத்துரைத்தோம். இன்னும் அது தொடர்பில் எதுவித முன்னேற்றமும் இடம்பெறவில்லை. என அவர் இதன்போத தெரிவித்தார்.

செய்தியாளர் – வ.சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button