இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல்!!

Political prisoners

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (30.11) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன உண்டு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும் உள்ளது.

இத்தகைய சுதந்திரமும், பாதுகாப்பும் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும். இதனை விடுத்து விசாரணை என அழைப்பு விடுப்பது, தங்களை இரகசிய பொலிசாரும், புலனாய்வாளர்களும் பின்தொடர்கிறார்கள் என்று உணரச் செய்வதும் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இது தொடரக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆட்சியாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் அரசியல் கைதியான வவுனியாவை சேரந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கைதியாக இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்கள் கழுகு கண்களோடு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த பின்னர் விடுதலையானோர் தன் குடும்ப உறவுகளோடு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நடமாடி விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் உணர்வுக்குள் அவர்களை தள்ளுவதும், விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் மகிழ்வை இல்லாதொழித்து திறந்தவெளி சிறைக்குள் நாம் இருக்கின்றோம் எனும் மனநிலையை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிப்பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட்டோம் என வெற்றிவிழா எடுப்பவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் தன் குடும்ப உறவுகளோடு வாழ்வை தொடர அனுமதிக்க வேண்டும். இது மறுக்கப்பட்டு நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்?

போர் வெற்றி என்பது மக்களை அடிமையாக்குவதல்ல. மக்களது சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்வதாகும். அது இன்றும் முன்னாள் அரசியல் கைதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதனையே விசாரணைக்கான அழைப்பு வெளிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநா மனித உரிமை ஆணையகம் வருடாந்த திருவிழாவை நடத்துவதோடு நின்றுவிடாமல் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button