எழுத்து – அன்பரசு
மொத்த குட்டிகள் மூவிரண்டு கண்
மூடிய நிலையோ மாறவில்லை
பெத்துப்போட்டாள் பெருமாட்டி
பேணிக் காக்கிறாள் பாலூட்டி
ஒட்டிய வயிற்றில் உணவில்லை
வற்றிய மார்பில் பால் இல்லை
குட்டிகள் ஊட்டும் தொல்லையிலே
கொஞ்சம் கூட வலியில்லை
கண்ணில் பாசம் கடல்போலே
கவிழ்ந்து கிடக்கிறாள் வெறும் உடல் போலே
எட்டிப் பார்த்த என்னோடு
ஏதோ சொல்ல நினைக்கின்றாள்
ஆகாரம் இருந்தால் தாருங்களேன் என்
ஆவி காக்க கேட்கவில்லை
பாதி வயிறேனும் நிறைந்தால் தான் இந்த
பாவி மார்பில் பால் சுரக்கும்
பெற்ற குழந்தைகள்பசியோடு
பெருங் குரலெடுத்து அழுகையிலே
சுற்றி அலைந்து பார்த்து விட்டேன்
ஒரு சோறுகூட கிடைக்கலையே
காட்டு வழி என்பதனால்
கையறு நிலையில் நான் நின்றேன்
கண்ணில் கண்ணீரை காட்டிவிட்டு என்
கால்கள் நடந்தது அந்த இடத்தை விட்டு…..