நிறை ……
பேரன்பால் நிறை
பெருங்கனவுகளால் நிறை
சிரிப்பினில் நிறை
சிந்தனையில் நிறை
அறத்தால் நிறை
அமைதியால் நிறை
உண்மையில் நிறை
உதவியில் நிறை
கானத்தால் நிறை
கனிவினால் நிறை
பண்பினால் நிறை
பணிவினால் நிறை
அகந்தை தொலைத்து
அறிவினால் நிறை
உறவெனும் கிண்ணத்தை
உணர்வினால் நிறை
உனக்கென பெயரினை
உயர்வினால் நிறை
நீ என்பது
வெறுங்கூடல்ல…
நீ என்பது
வளர்ப்பு மீனல்ல…
நீ
நெருப்பில் முளைத்த விதை..
நீ
அவனியின் பெரும் சக்தி…
நீதான் தங்கம்
நீதான் வைரம்
நீதான் வைடூரியம்
நீதான் பிளாட்டினம்
நீதான் மாணிக்கம்
உனக்கானவற்றை
இயற்கை தீர்மானிக்கிறது..
ஆனால்
உன்னை நீதான்
தீர்மானிக்கிறாய்…
தோல்வி வீழ்ச்சி அல்ல..
துயரம் தொடர்ச்சி அல்ல …
கடைசி என்பது
கீழானதல்ல..
பிரமாஸ்திரம் கடைசியில் தான்
பிரயோகிக்கப்பட்டது…
நீரைப்போலிரு..
எங்கும் அதன் இயல்போடு
இசைந்து கொள்ளலாம்..
வேரைப்போலிரு..
யார் ஊற்றினாலும்
இழுத்துக் கொள்ளலாம்…
அழகு அற்பமானது…
அறிவு மிடுக்கானது…
தேடு…
எதைத் தேடுவதென்பதில்
தெளிவாக இரு..
தட்டு…
நல்லவற்றைத் தட்டு…
அலைபேசி வைத்திரு…
அடிமையாகிப் பிதற்றாதே..
உற்சாகம் உயரவைக்கும்..
சோம்பேறித்தனம்
சாவுக்கு வழி செய்யும்..
ஒளியாகு…இருள் அகற்று…
அடுத்தவர் தேவை தான்- ஆனால்
உன்னைச் செதுக்கும் பணியை
நீயே கையில் எடு…
அன்புக் குழந்தைகளே!!
உலகம் உங்களுக்கு
சாமரம் வீசட்டும்..
உறவுகள் உங்களை
தலை சாய்த்துப் பார்க்கட்டும்…
மீண்டும் சொல்கிறேன்
நீ சாதாரண விருட்சமல்ல..
தீயில் உதித்த
விதையின் முளை…..
நிறை….
யாதுமாகி நிறை….
கோபிகை