விமானத்தை அதிகாரிகள் கைகளாலேயே தள்ளிச்சென்ற சம்பவம் நேபாள நாட்டில் நடைபெற்று இருக்கிறது.
சாலையில் பழுதாகி நிற்கும் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை நாம் கைகளால் தள்ளிச்செல்கிறோம். ஆனால் நேபாள நாட்டில் விமானத்தையே தள்ளிச்சென்ற விசித்திர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. நேபாள நாட்டின் பஜுரா விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று தரையிறங்கிய 9N-AVE விமானத்தின் பின்புற டயர் திடீரென்று வெடித்துள்ளது.
இதனால் ஓடுதளத்திலேயே விமானம் பலமணி நேரங்களாக நின்றுள்ளது. இதையடுத்து வேறு விமானங்கள் எதுவும் தரையிறக்க முடியாத நிலையில் அந்த விமானத்தை அகற்றுவதற்கு கூட வாகனங்கள் எதுவும் இல்லாமல் அதிகாரிகள் திண்டாடியுள்ளனர்.
இதையடுத்து சற்றும் தயங்காத அதிகாரிகள் சிலர் ஒன்றுசேர்ந்து திடீரென்று விமானத்தை தங்களது கைகளாலேயே தள்ளியுள்ளனர். 20 பேர் சேர்ந்து தள்ளியதால் ஒருவழியாக அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது. இப்படி கையால் விமானத்தை தள்ளிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நேபாளத்தில் மட்டும்தான் இதுபோன்ற விசித்திரங்கள் நடக்கும் என்று சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.