கலைந்த கனவுகளை மீட்டுப் பார்க்கிறேன்…கண்ணீரைத் தவிர வேறொன்றும் பதிலில்லை….அது ஒரு இளங்காலைப்பொழுது. தகித்துக் கொண்டிருந்தான் சூரியன். தூரப்பயணம் ஒன்று துயர நினைவுகளைத் தருமென்று தெரியாமலே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். அன்றைய நினைவலையொன்றை உங்களோடு பகிர்கிறேன்…
கடந்த காலம் எம் இனத்து மக்களை பலவழிகளில் தண்டித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
பலர் அங்கங்களை இழந்து நோயாளிகளாகியதோடு மீளவே முடியாமல் நிரந்தர மனஉளைச்சலுக்கும் ஆளாகிவிட்டார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குடும்ப உறவுகளையும் சொந்த பந்தங்களையும் இழந்து இன்றுவரை மீள முடியாத துயரத்திற்குள் சிக்குண்டு தவிக்கும் எம் மக்கள் ஓரளவிற்காவது தம்மை நிலைப்படுத்தி வாழ்வதற்குக் காரணம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் உறவுகளே ஆகும்.
இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் அன்புறவுகள் பலர் இங்கிருக்கும் எம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக உதவிகளைச் செய்துவருகிறார்கள்.
இவ்வாறு நல்லுள்ளம் கொண்ட உறவொருவர் தங்கள் வீட்டின் முக்கிய நினைவொன்றினை முன்னிட்டு ஒரு தொகைப் பணத்தினை அனுப்பியிருந்தார்.
எமக்கு வரும் உதவிக்கான அழைப்புகளில் அதிக தேவை உடையோரினைத் தேர்வுசெய்தே உதவிகளை வழங்கி வருகின்றோம். அன்றொருநாள் இவ்வாறு கிடைக்கப்பெற்ற உதவியை நாம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ளவர்களிற்கு வழங்குவோம் என்று முடிவெடுத்துச் சென்றிருந்தோம்.
உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பது சுயதொழில் முயற்சிக்கு உதவுவது பாடசாலை மாணவர்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களிற்கான கற்றல் உபகரணங்களை வழங்குவது போன்றவற்றையே அதிகமாகச் செய்வதுண்டு.
அன்றைய தினத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்வோம் என்று நினைத்து உடைகளை வாங்கிச் சென்றிருந்தோம். அதில் சாறிகளே அதிகமாக இருந்தது.
நாம் தெரிவு செய்திருந்தவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து வழங்குவோம் என்று அனைவரையும் அழைத்திருந்தோம். அதிகமாக யுத்தத்தில் குடும்ப உறவுகளை இழந்தவர்களையே தெரிவுசெய்து கொண்டுசென்ற ஆடைகளை வழங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தோம்.
அப்போது ஒரு அம்மா மெல்லிய உடல்வாகோடு வந்திருந்தார்.இதில் இருக்கும் சாறியில் உங்களிற்குப் பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா என்று அவரிடம் கூறினேன்.
அவர் படத்தில் காட்டப்பட்ட சாறியினைத்தான் தெரிவு செய்திருந்தார். தன்னிடம் தற்போது இருக்கும் சாறியை அடிக்கடி கட்டுவதால் பழுதாகிவிட்டதாகவும் முக்கியமான ஒரு தேவையின் போது கட்டுவதற்கு இது ஏற்றது என்றும் கூறியபடி படத்தில் உள்ள சேலையைத் தெரிவுசெய்தார்’.
அப்போது நிமிர்ந்து பார்த்தேன். அவரது முகம் வாடி ஏமாற்றத்தோடு ஏக்கங்களால் நிறைந்திருப்பது தெரிந்தது. அந்தத் தாயாரின் கண்களும் கலங்கியது ….என்னை நிமிர்ந்து பார்த்ததும் ….
‘பிள்ளையளும் இல்லை..புருசனும் செத்திட்டார்….’
அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கும் கண்கள் கலங்கி தொண்டை அடைத்துக் கொண்டுவந்தது. சில வலிகளை எழுத்துக்களிலோ வார்த்தைகளிலோ வடித்திட முடிவதில்லை என்றே கூறுவேன்.
சில சம்பவங்களைக் கண்டு அனுபவிக்கும்போது அதன் வலிகளை நிஜமாக உணர முடியும்.
அந்த அம்மாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவேன்..?எவ்வளவு இழப்புக்கள், எவ்வளவு துயரங்கள்.அம்மாவிற்கு ஆறுதல் கூறமுடியாது வார்த்தைகளின்றித் தவித்தேன்.
அம்மாவின் ஒரு மகள் யுத்தத்துக்குள் அகப்பட்டு இறந்துவிட்டார். இன்னொரு மகன் இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்….கணவனும் இறந்துவிட்டார் என்று கூறி அழுதார்.
அந்த மகனை எதிர்பார்த்து தான் இந்த அம்மா வருடக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இன்றுவரை எம் மக்கள் அனுவிக்கும் துன்பங்கள் ஏராளம்…. உறவுகளை இழந்ததனால் பலர் நிரந்தர நோயாளிகளாகவும் ஆகிவிட்டார்கள்.
என்றாவது ஒருநாள் தமது உறவுகள் வரக்கூடும் என்ற ஏக்கத்தில் ஒரு நப்பாசையில் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
பலரது பொழுதுகள் விடைகாண முடியாத கேள்விகளோடும் ஏக்கங்களோடும் தான் அன்றாடம் புலர்ந்துகொண்டிருக்கிறது……
எழுத்தாக்கம் – பிரபா அன்பு