இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!!

Order of the President

நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை இன்று (04) முற்பகல் பார்வையிட்ட போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பெரும் போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நிலவுகின்ற அரிசிக்கான தேவையை தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒரு நெல்கூட கொள்வனவு செய்யப்படாததாலும், பயன்படுத்தக்கூடிய நெல் கையிருப்புக்களை கால்நடை தீவனமாகக் கருதி தனியார்த்துறை வியாபாரிகள் ஒரு சிலருக்கு மிகக் குறைந்த விலைக்கு வழங்கியதாலும் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காமை, இடைத்தரகர்களுக்கு தரகுப் பணம் வழங்குவது, நெல் கொள்வனவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், களஞ்சியசாலைகளை உரிய முறையில் பராமரிக்காமை போன்ற காரணங்களால் விவசாயிக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் இடையிலான உறவு தூரமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button