இலங்கைசெய்திகள்

மூன்று முக்கிய அமைச்சர்களுடன் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி சந்திப்பு!!

'One country - one law'

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் சந்தித்துள்ளது.

செயலணியின் கடந்தகால மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதித்துறையில் நீதி நிர்வாகத்தை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்மானமயமாக்கல் வேலைத்திட்டம்,  புதிய நீதிக்கட்டமைப்பு,  நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பான தகவல்களை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி செயலணியிடம் கையளித்தார்.

அதேநேரம், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச மாநாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு, ஒருநாடாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு ஏதேனும் காரணிகள் தோன்றுமாயின் அவற்றை முறியடிப்பதன் முக்கியத்துவம்பற்றி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button