‘தேவமித்திரனின் ஸ்கூட்டியில் தான் நான் வீடு செல்ல வேண்டும்’ என்ற எண்ணமே மனதில் ஏதோ ஓர் உவகையைக் கொடுத்தது.
நீண்ட நாட்களின் பின்னர் அவனையும் அப்பாவையும் கண்ட சந்தோசமாக இருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்.
எனது பணி முடிந்ததும் , எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி புறப்பட்ட நான், அவனது தலைக்கலசத்தையும் அதற்குள் இருந்த திறப்பையும் எடுத்துக் கொண்டு நடந்தேன்.
கைவிரலில் திறப்பைக் கொழுவி, சுழற்றியபடி வந்த என்னை, பின்னால் இருந்து அழைத்த மேகவர்ணனைத் திரும்பிப் பார்த்தேன்.
“என்ன வைத்தியரம்மா….பேருந்தில் பயணமா?” எனக்கேட்க,
“இல்லை…..இல்லை….நான் இதிலேயே போகப்போறன், பேருந்து என்றால் பிறகு சந்தியில் இறங்கி நடக்கவேணுமே” என்று நான் கூறியதும்
“அப்படியா….சரி…சரி…”என்ற மேகவர்ணனுக்கு தலையை ஆட்டி விடைகொடுத்தபடி நடந்து வந்து அந்த ஈருருளியை எடுத்தேன்.
நெடிய ஆண்டுகளின் பின்னர் சகபாடியைக் கண்டதினால் மனதில் பேருவகை பொங்கிப் பிரவாகித்தது.
இருந்தபோதிலும் மனதின் ஓரத்தில் முணுக்….முணுக்…என ஒரு வலி ஓடவே செய்தது.
காரணம் வேறொன்றும் இல்லை, தேவமித்திரனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பதுதான்.
நானாகச் சொல்லுவதில்லை எனத்திடமாக நினைத்துக் கொண்டேன். அந்தச் சின்ன வயது பள்ளி நாட்கள் மனதில் ஊர்கோலம் போனது.
சிறுவயது முதலே சுட்டித்தனம் மிக்க எனக்கு அதே குண இயல்புடைய தேவமித்திரனுடன் அடிக்கடி மோதல்தான் ஏற்பட்டது.
நாங்கள் சண்டை போடுவதும் ஆசிரியர்கள் தீர்த்து வைப்பதும் அடிக்கடி நடப்பது தான்.
ஒருவாறு சண்டையும் சமாதானமுமாக நாங்கள் ஐந்தாம் ஆண்டுவரை வந்து விட்டோம்.
அப்போது பாடசாலை பரிசளிப்பு விழாவிற்கு நிகழ்வுகளை ஒழுங்கமைத்த ஆசிரியர்கள், தாளலயம் நாடகத்திற்கு, என்னையும் தேவமித்திரனையும் ஒன்றாக எடுத்தனர்.
கணவன் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் எங்களுக்கு.
பத்து வயதில் அது ஒரு பெரிய விடயம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. தேவமித்திரன் கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..
எனக்குள் ஏனோ ஒரு சங்கடமாகவே இருந்தது.
‘இஞ்சேருங்கோப்பா….
இஞ்சேருங்கோப்பா… வள்ளி அக்கான்ரை மகளுக்கெல்லோ வெளிநாட்டிலை மாப்பிள்ளையாம்….”‘
‘என்னப்பா சொல்லுறாய்….என்னப்பா சொல்லுறாய்…. ?
அங்கவைக்கோ….
சங்கவைக்கோ…
கலியாணம்…. ஆருக்கப்பா’
‘அங்கவைக்கு வந்த வரனை
சங்கவைக்கு முடிச்சிட்டா…
வள்ளிஅக்கா….
சங்கவைக்கு முடிச்சிட்டா… ‘
‘உது என்ன விளப்பம் எடி…
உது என்ன விளப்பம் எடி…’
‘சேவை செய்யப்போகுதாம்…அங்கவை சொந்த மண்ணிலை
சேவை செய்யப்போகுதாம்….. ‘
‘நல்லதுதான்….அதுவும் நல்லதுதான்…..அங்கவை சொன்ன சேதி..ரொம்ப நல்ல சேதி தான்….’
பசுமரத்தாணி போல அந்த நாடக வரிகள் என் நெஞ்சில் பதிந்து போயிருந்தது.
அந்த நாடகம் நடித்த பிறகு தேவமித்திரனுக்கு என்னை பட்டம் தெளிப்பது வகுப்பு மாணவர்களின் வேலையானது.
ஒருவேளை அந்த நினைப்பு என் மனதில் ஆழப்பதிந்து போனதுதான் இன்று ஏற்பட்ட இந்த பரவசத்திற்கு காரணமோ???
குழம்பிய மனதைக் குலுக்கியபடி ஈருருளியை வேகமாக ஓடத்தொடங்கினேன்.
தீ …..தொடரும்.