பாகம் – 1
அமைதியும் ஆரவாரமும் கலந்திருந்தது ஆதரவற்றோரைப் பராமரிக்கும் அந்த இல்லத்தில். ஒருபுறம் , சிறார்கள் ஆர்ப்பரிப்போடு விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு புறத்தில் வயதான சில தாய்மார் சுவர் ஓரங்களைத் துணையாக்கியபடி சாய்ந்து அமர்ந்திருந்தனர். இளம்வயதினர் சிலர் கூடியிருந்து கதைகள் பல பேசிச்சிரித்துக் கொண்டிருந்தனர்.
அன்று , அங்கு மருத்துவ முகாம் என்பதால், காரை வெளியே.நிறுத்திவிட்டு, படலை திறந்து உள்ளே விரைந்தேன்.
“வணக்கம் …வணக்கம்…..வைத்தியர் சமர்க்கனி…. “
புன்னகையோடு வரவேற்ற அந்த இல்லத்தின் பொறுப்புக்குரிய அருட்தந்தைக்கு பதில் வணக்கம் கூறியபடி உள்ளே நுழைந்தேன்.
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அந்த இல்லத்திற்கு வருவதை என்னுடைய கடமையாக கொண்டிருக்கிறேன்.
வாராந்தம் , சனிக்கிழமை நாட்களில் இவ்வாறு, ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் எனச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்வது நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து செய்கின்ற சமூகப்பணி.
இன்றைய தினம் இந்த இல்லத்தில் எமக்கு வேலை, சக வைத்தியர்கள், தாதியர் சிலர், உதவியாளர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவ முகாமிற்கான ஆயத்தங்களில் மும்முரமானோம்.
ஏற்கனவே, அங்குள்ள பணியாளர்கள் மூலம் சில ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டிருந்ததால் எங்கள் வேலைகள் இலகுவாயிற்று.
மளமளவென மருத்துவ முகாமை ஆரம்பித்தோம். சக வைத்தியரான காரூரன், “என்ன சமர், தொடங்குவோமா ?” என்றபடி வர சம்மதமாக தலையை காட்டியபடி எனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
ஒரு நிமிட அகவணக்கத்துடன் சம்பிரதாயமாக அன்றைய மருத்துவ முகாம் ஆரம்பித்தபோது மிகுந்த உற்சாகம் எங்களுக்குள்ளே பீறிட்டது.
காரணம் வேறொன்றும் இல்லை, அவரவரது தனிப்பட்ட வேலைகள் நிமித்தம் 3 வாரமாக எங்கள் பொதுப்பணி இடம்பெறவில்லை. சற்று இடைவெளிக்குப் பின்னரான இன்றைய பணி எங்களுக்கு பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஒன்றாகத் தந்தது.
ஒவ்வொருவராகச் சோதனைக்கு வந்து கொண்டிருந்தனர். முதலில் சிறு பிள்ளைகளைப் பார்ப்பதென்றும் பின்னர் பெரியவர்களைப் பார்க்கலாம் எனவும் திட்டமிட்டபடியே சிறுபிள்ளைகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.
என்னிடம் வந்தமர்ந்த அந்தச் சின்னப் பெண் குழந்தைக்கு எட்டு வயதிருக்கும். பின்தங்கிய கிராமம் ஒன்றில் குடியிருப்பில் வசிக்கும் அவளுடைய பெற்றோர் இருவரும் வேறு வேறு துணைகளைத் தமதாக்கிச் சென்று விட்டதால், தனித்து நின்ற குழந்தையை தாய் வழிப்பேத்தி தான் இங்கு கூட்டி வந்து சேர்த்திருந்தார்.
புதிதாகப் பிள்ளைகள் வந்தால் அருட்தந்தை தகவல் தந்து விடுவார். நான் அந்த இல்லத்திற்கு பலரிடம் கேட்டு நிதி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதாலும் அங்குள்ளவர்கள் மீது இயல்பாகவே எனக்கு இருக்கும் பாசத்தினாலும் அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கும் என் மீது தனிப்பாசம் இருந்தது.
அவளுடைய கால்களில் சிரங்கு போன்ற ஒரு வகை நோய் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே மருந்து போடப்பட்டிருந்தும் அது மாறாமல் புண்ணாக்கியிருந்தது.
என்னைப் பார்த்து விட்டு மலங்க மலங்க விழித்த அந்தச் சின்னப்பெண்ணைக் கண்டதும் எனக்குள் இரக்கம் சுரந்தது.
“உன் பெயர் என்ன?” மெல்ல கேட்டேன்.
“வண்ணமதி ” என்றாள்.
ஒரு நொடி மனதில் செந்தூர வாசனை பரவியது.
வண்ணமதி என்பது என் தோழியின் பெயர். விதையாகிவிட்ட அவள், செஞ்சோலை பராமரிப்பகத்தில் வளர்ந்தவள். பின்னாளில் அறப்போரில் ஆகுதியாகிவிட்டாள்.
எண்ணங்கள் மனதை கனக்கவைக்க, பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியபடி,
” ஓ…..அழகான பெயராச்சே….எத்தனையாம் வகுப்பு படிக்கிறாய்? என்றதும்
அழகான ஒரு சிரிப்பு அவளுடைய வதனத்தை அலங்கரிததது.
“ஆண்டு ஆறு” வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என்பது போலச் சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தேன்.
“என்ன சாப்பிட்டாய்? “
“கடலை ” ….
மீண்டும் மென்மையாய் சொன்னவளிடம்
“கடலை உனக்கு விருப்பமா?” என்றேன்.
எனக்கு எல்லா சாப்பாடுமே பிடிக்கும். அம்மம்மா சோறுதான் எப்போதும் தருவா”
வெள்ளை மனதோடு சொன்னாள் அவள்.
“கால் வலிக்கிறதா?” நான் கேட்டதும் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
“நான் வலியே தெரியாமல் உனக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு மருந்துகளும் தருகிறேன்… நேரம் தவறாமல் மருந்து போடு, மாறிவிடும்” என்ற போது அந்தக் கண்களுக்குள் வந்த மலர்வு என்னை ஆச்சரியப்படுத்தியது.
அன்று மாலை வரை மருத்துவ முகாம் நடந்தது . என் பணியில் கவனமாக இருந்தாலும் அங்கும் இங்கும் ஒரு பட்டாம்பூச்சி போல ஓடிக்கொண்டிருந்த அவளை நானும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.
தீ……. தொடரும்
கோபிகை.