பாகம் .7
ஆண்களும் பெண்களுமாக ஏற்றி வந்த வாகன ஒலி வைத்திய சாலை வளாகத்தை நிறைத்தது.
காலையில் பால் மட்டும் குடித்துவிட்டு வந்து விட்டேன். சாப்பிடும் எண்ணம் அப்போது இருக்கவில்லை.
வழமையாக காலை உணவை வீட்டில் சாப்பிட்டு விட்டே வருவதுண்டு. அப்படி இல்லை என்றாலும், வந்த உடன் சாப்பிட்டு விடுவது வழமை. இன்று இரண்டுமே செய்யவில்லை.
“விடுதிகளில் இருந்த நோயாளர்களைப் பார்வையிட்டுவிட்டு வந்ததும் சாப்பிடலாம்” என எண்ணிச் சென்று விட்டதால் இப்போது வயிறு பசிக்க ஆரம்பித்தது.
கைப்பையில் இருந்த சிறிய சாப்பாட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்து
” முத்தண்ணா, ஒரு இஞ்சி தேநீர்…” என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டேன்.
ஐந்தே நிமிடத்தில் ஆவி பறக்கும் தேநீரோடு வந்து நின்றான் கடையில் வேலை செய்யும் பையன்.
இரண்டு மிடறு தேநீர் குடித்து, இரண்டு வாய் பிட்டு சாப்பிட்டது தான் ……
வாகன ஒலிகளும் மக்களின் இரைச்சல் ஒலியும் வழமையைவிட சற்று அதிகமாக கேட்கவே,.
“என்னவோ…..ஏதோ …..”என யோசிக்கும் போதே, உள்ளே தண்ணீர் போத்தல்.வாங்குவதற்காக வந்த ஒருவர், கிடைத்த சிறிய நொடி நேரத்தில், நடந்தவற்றை கூற , பாதிச்சாப்பாட்டை அப்படியே மூடி வைத்துவிட்டு, தேநீரை, கைகழுவும் தொட்டியில் ஊற்றிவிட்டு, அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு , விரைந்து நடந்தேன்.
வைத்தியர்களும் தாதியர்களும் செவிலியர்களுமாக ஆரம்ப சிகிச்சையில் ஈடுபட்டிருக்க நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன்.
அப்போது தான்,
“அப்பா….” என்று மேகவர்ணன் சற்று உரக்க அழைப்பது கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
“என்ன வர்ணன்?. ” கேள்வியோடு பார்க்கவும்
“என்னுடைய நண்பனின் அப்பா….” எனக் கூறிவிட்டு அலைபேசியில் யாருக்கோ அழைப்பு எடுத்தபடி, சற்று விலகிச்சென்று கதைக்கவும்,
மேகவர்ணன் , காட்டிய முதியவரின் அருகில் சென்று பார்த்தேன்.
அந்த முகம் எனக்கும் பரிச்சயமானது போலவே தோன்றியது.
கை , தன் பணியில் இருக்க, மூளையில் மட்டும் ‘ யார் இவர், எங்கோ பார்த்திருக்கிறோமே’ என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. மேகவர்ணனும் என்னோடு இணைந்து அவரைப் பார்த்துக்கொண்டிருக்க,
அவருக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தேன்..
பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.
பரபரப்போடு நடந்துவந்து,
“வர்ணன்….அப்பாவுக்கு எதுவும் இல்லையே ” எனக்கேட்ட அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தேன்.
அட…..நான் ஆரம்ப கல்வியைக் கற்ற பாடசாலையில் என்னோடு கூடப்படித்த தோழன், தேவமித்திரன்.
அவனுக்கு இருந்த பதற்றத்தில் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
“அப்பாவுக்கு என்னடா…. “
குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க, கண்மூடி.படுத்திருந்த தந்தையை, கவலையோடு பார்த்தபடி தேவமித்திரன் கேட்க,
“அப்பாவுக்கு சாதாரண மயக்கம் தான், நடந்த கலவரத்தில் திடீரென மூச்சுத்திணறல் வந்திருக்கிறது, பயப்படுறமாதிரி எதுவும் இல்லை…..மித்திரன்”.என நான் கூறியபோதும்,
‘அப்பாவுக்கு ஏதும் நடந்துவிடுமோ’ என்ற பயம் மனதை நிறைத்திருந்ததனாலோ என்னவோ தேவமித்திரன்.அப்போதும் பதற்றமாகவே இருந்தபோதும் அதன் பிறகு நானும் எதுவும் பேசாமல் நின்றுவிட்டேன்.
நானாக என்னை அறிமுகப்படுத்த எனது தன்மானம் இடம்தரவில்லை.
அனுமதிக்கப்பட்ட , ஒவ்வொரு காணாமல் போன உறவுகளின் உறவினர்களையும் உரிமையோடும் கரிசனையோடும் கவனித்துக்கொண்டேன்.
ஒவ்வொருவரும் எனக்கும் பெறோரை, சகோதரரைப் போன்றவர்களே….என உள்மனது சொன்னது.
எங்கள் வாழ்வியல் முறை அப்படிப்பட்டது தானே…..
நேரம் கடந்தது……காலைக் களேபரத்தில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த ஒவ்வொருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
மூன்று மணி நேரமாக தேவமித்திரன் தந்தையின் கட்டிலுக்கு அருகில்தான் அமர்ந்திருந்தான்..
தந்தைக்கு எதுவும் இல்லை என்று சொன்ன போதும் மனம் சமாதானம் அடையாமல், அவன் தவித்துக் கொண்டிருப்பது புரிந்தது.
மாலை நான்கு மணிக்குப் பின்னரே தேவமித்திரனிடமும் அப்பாவை அழைத்துச் செல்லலாம்’ எனக்கூறப்பட்டது.
பேருந்துப் பயணம் தற்போது அப்பாவுக்கு ஏற்றதல்ல. தானும் அவசரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து விட்டதை எண்ணிய படி யோனையோடு நின்றிருந்தவன், வாடகை காருக்கு ஏற்பாடு செய்தபோதும் அந்த நேரத்தில் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை.
மேகவர்ணனும் என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தான்.
இருவரும் இவ்விடயம் குறித்து கதைத்தது விளங்கியபோதும் நான் பேசாமலே நின்றேன்.
அந்தச் சில மணி நேரத்தில் , தேவமித்திரனுடன் ஒரு வைத்தியராக கதைத்து பரிச்சயமாகியிருந்தேன்..
“மேகவர்ணன், உங்கள் நணபர் நிறைய யோசிக்ககிறார் போல……ஒரு சிக்கலும் இல்லை……என்னுடைய காரைக்கொண்டுபோகச் சொல்லுங்கோ…” என்றேன்..
ஆச்சரியமாய் என்னைப் பார்த்த தேவமித்திரனிடம்,
“அப்படி பார்க்க வேண்டாம் வக்கீல் ஐயா, நீங்கள் காரைத்தராமல் ஏமாற்றினாலும் பொறுப்பிற்குத்தான் உங்கள் நண்பர் இருக்கிறாரே….” என்றபடி மேகவர்ணனைப் பார்க்க, இருவரிடமும் மெல்லிய சிரிப்பு உதித்தது.
தீ …..தொடரும்.