செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத்தீ (பாகம் 3) – கோபிகை!!

Novel

பின்னிரவு நேரம்,  அமைதி நிறைந்த அந்தப் பொழுதில் ,  இதயத்தை உலுக்கிய அந்தக்கனவில் திடுக்கிட்டு எழுத்து அமர்ந்து கொண்டேன். 

வானில் இருந்து பொழிந்த கரிய உருண்டைகளின் புகை அந்த லானத்தையே மூடிப்  படர்ந்திருந்தது. எங்கும் அவல ஒலி.

சிறுவர்களும் இளம் பெண்களும் கதறிய காட்சிகள்,  ஆண்களின் பதற்றம் நிறைந்த முகங்கள்….அங்கும் இங்கும் ஓடி அலையும் அன்னையரின் கூக்குரல்கள்…சிவப்பு  போர்த்திய  உடல்கள்….

மனதில் கனமான துயரம் அழுத்த  இதயம் படபடவென்று  அடித்துக் கொண்டது. மெல்லத் திரும்பி மேசையில் இருந்த மின்விளக்கைப் போட்டுவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு கட்டில் மேல்பக்கமாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.  இருண்டு போன கடந்த காலம் மனக்கண்ணில் உதயமாகியது.

தேசப்பற்று நிறைந்த தந்தையை விபரம் தெரியும் முன்னரே இழந்து விட்டு,  எட்டு வயதுப் பாலகியாக இருக்கும் போதே ஒரே அக்கா  காலப்பணி செய்யப் புறப்பட்டுவிட , அண்ணனும் அவளுமாய் வாழ்ந்த நாட்களில் அம்மா மனம் விட்டுச் சிரித்து அவள் பார்த்ததே இல்லை.  எப்போதும் ஒப்புக்கான சிரிப்பு தான்.

பத்து வயது இருக்கும் போது,  அக்காவின் வித்துடல் வீடு வந்ததும்  அம்மா மயங்கிச் சரிந்ததும் இப்போது போல மனதை வலிக்கச் செய்தது.

அதன் பிறகு , அதிக நாட்களில்லை,  அண்ணனும் அம்மாவுக்கு ஒரு மடலை வரைந்து வைத்துவிட்டு அவர்களை விட்டுச் சென்று விட்டான். 

அவள்,  ‘பெரிய பெண் ‘ ஆன போது , சொல்லிக் கொள்ளும்படியான உறவுகள் யாரும் அருகில் இல்லை.  அம்மாவும் அவளுமாக பக்கத்து வீட்டு வரதா மாமியின் உதவியுடன்  தண்ணீர் வார்க்கும் சடங்கினை முடித்துக்கொண்டனர்.

வரதா மாமிக்கு இவளைவிட மூன்று வயது குறைவான ஒரே மகள்தான்.  கணவர் வெளிநாட்டில் இருந்தார்.  அம்மாவுக்கு மனத்துணை வரதா மாமிதான்.

ஒரு வருடம் கழித்து,  ஒருநாள் வீட்டுக்கு வந்த அண்ணா,  எனக்கும் அம்மாவிற்கும் மனதில் மகிழ்ச்சிப் பூக்களை மலரச்செய்தான்.

  என்னை அருகில் அழைத்து தலையைத்தடவி, சிரிக்கவைத்தபோது  என் உள்ளம் அடைந்த உவகை……..

அலுமாரியில் இருந்த அப்பாவினதும் அக்காவினதும் படங்களைப் பார்த்து விட்டு,  ‘ அம்மா…..இவை ரெண்டு பேருக்கும் நடுவிலைதான் என்ரை படத்தை வைக்கவேணும் ‘ என்ற போது அம்மா பெரிதாக அழவில்லை…

வாழ்வின் சோகங்கள், விடிவு கிட்டாத அன்றாட சீவியம், இவை எல்லாம் அம்மாவின் மனதை இறுகச் செய்திருக்கலாம்.

இரண்டு நாட்கள் விடுப்பில் வந்த அண்ணா,  அந்த நாட்கள் கடந்ததும் போய்விட்டான்.

அவன்.திரும்பிச் சென்ற போது என்னுடன் இருந்த சந்தோசத்தையும் கூடவே எடுத்துச்.சென்றுவிட்டான் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அம்மாவும் நானும் மீண்டும்  எங்கள் சின்ன உலகத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டோம்.

கடந்து வந்த அந்த நாட்கள் மிகத் துயரமானவை. தேவாலயத்தில் சரண்புகுந்திருந்த மக்கள் மீது நடந்த மரண வேட்டையில்,  வரதா மாமியின் மகளைக் காப்பாற்ற ஓடிச்சென்ற அம்மா ,அவளைக் காப்பாற்றிவிட்டு சமாதியாகிவிட தனித்து நிற்கும் அவலத்தின் கொடிய வலியை உணர்ந்து கொண்டேன் நான்.

பிற்பட்ட நாட்களில் அண்ணா,  எப்போதாவது வந்து பார்த்ததும் 2009 இல் மனைவி மற்றும் ஒரே மகனுடன் அவனும் இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றதும் …..

நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

எழுந்து வந்து ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றியபடி.நின்ற போது,  ஒரு பிரமாண்ட சமாதிக்குள் அடைபட்ட உணர்வு…எனக்குள்.

தொடரும்….

Related Articles

Leave a Reply

Back to top button