செய்திகள்நாவல்முத்தமிழ் அரங்கம்.

ஈரத்தீ (கோபிகை) – பாகம் 13!!

Novel

பாகம் – 13

அதிகாலைக் காற்று சில்லென்று வீசியது. மப்பும் மந்தாரமுமான அந்தக் காலநிலை மெல்லிய குளிரை எங்கும்  பரவச் செய்தது.

கையில் இருந்த படத்தை மீண்டும் பார்த்தேன்.  அழகான வீடும், அங்கே குடும்ப உறுப்பினர்களுமாக தேவமித்திரன் வரைந்து காருக்குள் வைத்திருந்த படம் தான் அது.

என்னுடைய மன விருப்பத்தை ஓவியமாக வரைந்து அனுப்பியதில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கியது எனக்குள்.
‘அவன் மீது கோபப்பட்டு விட்டோமே’ என ஒரு பக்க மனம் அடித்துக் கொள்ளவே செய்தது.

அதனைப் படுக்கைக்கு எதிரே இருந்த மேசையில் வைத்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டேன்.  

‘தேவமித்திரன் மீது ஏன் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது நேற்று?’ என்னையே கேட்டுக் கொண்டேன்.

பதில் புரியாமல் இல்லை,  ‘தேவமித்திரன் நேரில் வருவான்,  கதைக்கலாம்’ என எனக்குள் இருந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால் ஏற்பட்ட கோபம் தான் அது.

யோசித்துப் பார்க்க,  என் கோபம் அர்த்தமற்றதாகவே தோன்றியது.  இனிமேல் இவ்வாறான எதிர்பார்ப்புகளை வளர்க்க கூடாது என்று என்னை நானே எச்சரித்த படி சாய்ந்து அமர்ந்தேன்.

பல்கலைக்கழக விவகாரம் அறிந்ததும் மனமெல்லாம் வலியோடு தவித்தது.  நல்ல வேளையாக மாணவர்களின் போராட்டம் சாதகமான முடிவைப் பெற்றிருந்ததால் ஆறுதலாக இருந்தது.  

‘என்ன செய்யமுடியும் ?” என்ற மன ஆற்றாமையோடு முடங்கி விடாமல்  இவ்வாறு எழுச்சியோடு ஒன்று திரண்டு நியாயத்தை நிலைநாட்டியமை தமிழ் மக்களின் ஒற்றுமையான நிலைப்பாட்டையும் பல்கலைக்கழகத்தின் ஆணித்தரமான சக்தியையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லிவிட்டார்கள்’ என்ற எண்ணம் மனதை நிறைவு கொள்ள வைத்தது.

‘கடவுளாலும் கைவிடப்பட்ட ஒரு சபிக்கப்பட்ட இனமாக எமது தமிழினம்  இருக்கிறதே’ என்கின்ற துயர சிந்தனையோடு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.  எனக்கு பணி இல்லை,  மாலையில் தான் தனியார் மருத்துவமனைக்குப்  போகவேண்டும்.

இணையம், பத்திரிகை என அனைத்திலும் பல்கலைக்கழக தூபி உடைப்பு விவகாரமே இருக்க, எழுந்ததுமே  எல்லாவற்றையும்  ஒரு பார்வை பார்த்து விட்டு,  கட்டிலை விட்டு எழுந்து கொண்டேன். 

ஏனோ…திடீரென்று அந்தப் பெண் வண்ணமதியின் முகம் மனதிலே தோன்றியது.  அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் போல ஒரு தவிப்பு மனதில் உண்டாக,  மாலையில் அவளைப் பார்த்து விட்டு கிளினிக் போகலாம் என நினைத்துக் கொண்டே  என் வேலைகளை மளமளவெனத் தொடங்கினேன்.

கீழ் வீட்டில் வசிக்கும் சந்தனா, அழைக்கும் சத்தம் கேட்டு,  மேலிருந்து எட்டிப் பார்த்தபடியே “என்ன சந்தனா?” என்றேன். 

“சமர்……..அம்மா உழுத்தங்களி செய்திருக்கிறாவாம், இங்க வந்து காலைச்சாப்பாடு சாப்பிடட்டுமாம், சொல்லச்சொன்னவா” என்றாள்.

“சரி….சரி …நான் வர்றன்….சந்தனா எங்க,  வகுப்புக்கு போறீங்களா?” என்றதும்

தலையை மேலும் கீழுமாக ஆட்டியபடி,  ‘நேரமாகிவிட்டது…..’என்று சொல்லிக்கொண்டே கையை ஆட்டியபடி ஓடிவிட்டாள்.

அது இரண்டு தளங்களைக் கொண்ட பெரிய வீடு.  கீழ் வீட்டில் தான்  சந்தனாவின் குடும்பம் இருக்கிறது.

கணவன், மனைவி,  சாகித்தியன், சந்தனா என இரண்டு பிள்ளைகள். 

சந்தனாவின் அப்பா,  கிளிநொச்சி நகரில் வாகனம் திருத்துமிடம் வைத்திருக்கிறார்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் பெற்ற தந்தையைப் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றும். 
எப்போது கண்டாலும் ‘ அம்மா சமர், சாப்பிட்டாச்சா?’ என்பதே அவரது கேள்வியாக இருக்கும்.

‘பூங்குழலி அக்கா எப்போதும் சிரித்த முகமாக சந்தோசமாக இருப்பதற்கு அவரது அன்பும் கவனிப்புமே காரணம்’ என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

‘இந்த வேலையை முடித்து விட்டு பிறகு போய் சாப்பிடுவோம்’ என நினைத்த படி, தரையைத் துடைக்கத் தொடங்கினேன். 

தீ தொடரும்

Related Articles

Leave a Reply

Back to top button